தமிழகத்தில் வெப்பமும்... மழையும்...:எங்கெல்லாம் வெயில், எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு...?

சென்னை: தமிழகத்தில் இன்றும், நாளையும் வடமேற்கு மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தருமபுரி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட வடமேற்கு மாவட்டங்களில் 107 டிகிரி பாரன் ஹீட் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 98 டிகிரி பாரன் ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும், ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் 9 சென்டி மீட்டரும், நாகர்கோவிலில் 8 சென்டி மீட்டரும், மழை பதிவாகியுள்ளது. இதனிடையே லட்சத்தீவு, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்றிரவு முதல் மழை பெய்து வருகிறது. மாவட்டத்தின் மலையோர பகுதிகளான கோதையார், பேச்சுப்பாறை, திருஞ்சாணி உட்பட பல்வேறு பகுதிகளிலும் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குழித்துறை, முஞ்சிறை உட்பட பல்வேறு நகர பகுதிகளிலும் நீரோடி முதல் உள்ள கடலோர பகுதிகளிலும் மழை பெய்தது. தொடர் மழையால் மாவட்டத்தின் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: