கள்ளக்காதல் சம்பவத்தில் படுகொலை 9 மாதத்துக்கு பின் மீண்டும் உடலைத் தேடும் போலீசார்: கொடைக்கானல் வனப்பகுதியில் பரபரப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் கொலை செய்யப்பட்டவரின் உடல் பல மாதங்களாகியும் கிடைக்காததால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத முடியாத நிலை உள்ளது. இதனால் உடல் வீசப்பட்ட இடத்தில் போலீசார் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் - பழநி சாலையில் உள்ள பிஎல் செட் பகுதிக்கு, தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்த திருப்பதி (48) என்பவர், சில ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்கு வந்துள்ளார். அப்போது இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த ஜான்சிராணிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ஜான்சிராணியின் தங்கைக்கும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை திருப்பதி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது நண்பர்களான நாகராஜ், சரத்குமார் ஆகியோருடன் சேர்ந்து, 2019, ஆகஸ்ட் மாதம் திருப்பதியை கொலை செய்து, கொடைக்கானல் அடுக்கம் வனப்பகுதியில் சங்கு ஓடை அருகே சுமார் ஆயிரம் அடி ஆழமுள்ள குருடி பள்ளத்தில் உடலை வீசி சென்று விட்டனர். இதுகுறித்து திருப்பதியின் மனைவி முருகேஸ்வரி அளித்த புகாரின்பேரில் கொடைக்கானல் போலீசார் இவ்வழக்கில் துப்பு துலக்கி, மணிகண்டன், நாகராஜ், சரத்குமார், ஜான்சிராணி, சாந்தி ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

 கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் திருப்பதியின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் இவ்வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் உள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வழக்கில் கைதான 5 பேரும் ஜாமீனில் வெளிவந்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றத்தை நிரூபிக்க ஆதாரம் தேவைப்படுவதால், திருப்பதி கொலை செய்யப்பட்டு வீசப்பட்ட குருடி பள்ளம் என்ற இடத்தில் திண்டுக்கல் மாவட்ட குற்ற வழக்கு தொடர்பு துறையின் உதவி இயக்குனர் ஜெயசிம்மராஜா, கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார்  நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.  இந்த வழக்கில் உடலை தேடுவதில் பல சவால்கள் ஏற்பட்டுள்ளதாகவும், கொலை செய்யப்பட்டு 9 மாதங்களுக்கு மேல் ஆகி விட்டதால், இப்பகுதியில் ஏற்பட்ட மழை, வெள்ளத்தால் உடலை தேடுவது கடும் சிரமமாக உள்ளது என போலீசார் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை கொலை செய்யப்பட்டவரின் அங்கங்கள் கிடைக்காமல் இருப்பது இதுவே முதல் வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: