ரூ.74 லட்சம் கையாடல் வழக்கு ராமேஸ்வரம் கோயில் அலுவலகத்தில் 2வது முறையாக சிபிசிஐடி விசாரணை

ராமேஸ்வரம்: ஊழியர்கள் சேமநலநிதி சேமிப்பு பணம் ரூ.74 லட்சம் கையாடல் செய்யப்பட்ட வழக்கில், நேற்று 2வது முறையாக சிபிசிஐடி போலீசார் ராமேஸ்வரம் கோயில் அலுவலகத்தில் விசாரணை செய்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பணியாற்றும் ஊழியர்களின் சேமநல நிதி சேமிப்பு பணம் ரூ.74 லட்சம் கடந்த ஆண்டு கையாடல் செய்யப்பட்டது இதுதொடர்பான வழக்கை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி, ராமநாதபுரம் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதில் 2 பேர் கைதாகி, ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில், மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இவ்வழக்கு குறித்து முன்பு பணியாற்றிய அதிகாரிகள், ஊழியர்கள் பலரையும் விசாரணை செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். கடந்த 3ம் தேதி இவ்வழக்கு தொடர்பாக ராமநாதசுவாமி கோயில் தேவஸ்தான அலுவலகத்தில், சிபிசிஐடி போலீசார் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து கோயிலில் தற்போது பணியாற்றி வரும் கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன், கேஷியர் ராமநாதன், கணக்காளர் கணேசமூர்த்தி ஆகியோருக்கு, நேற்று முன்தினம் விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது. இவர்கள் மூவரும் குறித்த நாளில் ராமநாதபுரத்திலுள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகவேண்டும். நேற்று காலை சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் சரவணக்குமார், எஸ்ஐ சரவணன் மற்றும் போலீசார், ராமநாதசுவாமி கோயில் தேவஸ்தான அலுவலகத்தில் இரண்டாவது முறையாக விசாரணை நடத்தினர். சுமார் 40 நிமிடங்கள் இந்த விசாரணை நடைபெற்றதை தொடர்ந்து பல்வேறு ஆவணங்களையும் பார்வையிட்டனர். தற்போது சம்மன் பெற்ற ஊழியர்கள் மூவரை தொடர்ந்து, மேலும் பலரும் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட உள்ளனர்.

Related Stories: