தமிழக மக்களுக்கும், தொழில் துறைக்கும் அதிமுக அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும் :'ஒளிரும் தமிழ்நாடு'மாநாட்டில் முதல்வர் பழனிசாமி உறுதி!!

சென்னை : இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) சார்பில் நடைபெறும், ஒளிரும் தமிழ்நாடு என்ற காணொலி மாநாட்டினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்து உரையாற்றினார். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டில், பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், புதிய முதலீடுகளை ஈர்த்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.

 ஒளிரும் தமிழ்நாடு மாநாட்டில் முதல்வர் பழனிசாமி உரை நிகழ்த்தியது பின்வருமாறு...

*கொரோனா பாதிப்பின் சூழ்நிலையைப் பொருத்து மேலும் பலதளர்வுகள் அறிவிக்கப்படும்.

*தமிழக தொழிலாளர்களை பயன்படுத்தி தொழில்துறை இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும்.  

*கொரோனாவால் வாழ்க்கை முறை மாறியிருக்கிறது; இயல்பு நிலையை நோக்கி தமிழகம் முன்னேறுகிறது.

*தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

           

*சென்னை காவல்துறை ஆணையரகத்திற்குட்பட்ட பகுதிகளில் 25 சதவீதப் பணியாளர்களுடன், பிற பகுதிகளில் தொழிற்சாலைகள் 100 சதவீதப் பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

*அரசு அறிவுறுத்திய பாதுகாப்பு வழிமுறைகளை தொழில் நிறுவனங்கள் முழுமையாக கடைப்பிடித்து வருவதை மனதார பாராட்டுகிறேன்.  

*அதே வேளையில், எந்தவிதமான தொய்வுமின்றி இந்த பாதுகாப்பு வழிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென்று உங்களை எல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.

*மாறி வரும் சூழ்நிலையை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. சூழ்நிலையை பொறுத்து, மேலும் தளர்வுகளை அரசு அறிவிக்கும்  என தெரிவித்துக் கொள்கிறேன்.  

*பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்கள் முன்னணியில் உள்ளது.  

*தமிழ்நாடு அரசின் தீர்க்கமான செயல்பாடுகளுக்கும், நமது தொழில் துறையினரின் விடாமுயற்சிக்கும் இது தக்க சான்றாகும்.

    

*இந்த இக்கட்டான சூழ்நிலையில், தொழில் துறையில், தமிழ்நாடு அரசின் செயல் திட்டமாக, நான்கு முக்கிய இனங்களில் கவனம் செலுத்துமாறு அனைத்து அதிகாரிகளுக்கும் நான் அறிவுறுத்தியுள்ளேன்.

1.தமிழ்நாட்டிலுள்ள தொழில் நிறுவனங்கள் மீண்டும் இயல்பு நிலையினை விரைவாக அடைந்திட உதவி புரிதல்

·    

2.புதிய முதலீடுகளை ஈர்த்தல்

·    

3.அரசு அனுமதிகள் மற்றும் நடைமுறைகளை மேலும் எளிதாக்குதல்

4.கடன் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்கி, தொழில்களுக்கு தேவையான பணப்புழக்கத்தினை அதிகரித்தல்

*இதன் மூலம் புதிய தொழில்களும், ஏற்கனவே தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தொழில்களும், மேலும் சிறப்புடன் செயல்படவும், கொரோனா நமக்கு இட்டுள்ள சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள இயலும்.

*கொரானா தொற்று பரவலின் விளைவாக, வெளி மாநில தொழிலாளர்கள் பலர் தங்களின் சொந்த மாநிலத்திற்கு திரும்ப சென்றுள்ளார்கள். எனினும், எதிர்பாராத இச்சூழலில், தொழில் உற்பத்தி பாதிப்படையாமல் இருக்க, தமிழ்நாட்டைச் சார்ந்த தொழிலாளர்களை பயன்படுத்தி, இயல்பு நிலையை எய்த, தொழில் துறையினர் முயற்சிக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.  

*இதற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், இந்திய தொழில் கூட்டமைப்பு நிறுவனத்துடன் இணைந்து தொழிலாளர்களுக்கு சிறப்பு பயிற்சிகள்  அளித்திட தயாராக உள்ளது.

*தமிழ்நாட்டு மக்களுக்கும், தொழில் துறைக்கும் மாண்புமிகு அம்மாவின் அரசு என்றைக்கும் பாதுகாப்பு அரணாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி உரைநிகழ்த்தினார்.

Related Stories: