பைக் உடைந்த தகராறில் மீன் வியாபாரி வெட்டிக்கொலை: ரவுடி உள்பட 5 பேருக்கு வலை

ஆவடி: ஆவடி அடுத்த அயப்பாக்கம் அன்னை அஞ்சுகம் நகர் பாட்டாளி குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (32). மீன் வியாபாரி. இவரது மனைவி உஷா (28). இவர்களுக்கு சுஜித் (8) என்ற மகன் இருக்கிறான். அதே பகுதியில் பாண்டியனின் மாமா சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த 3ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (25) என்பவர் சக்திவேலுவின் பைக்கை உதைத்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில், பைக் உடைந்து சேதமானது. இதனால் பாண்டியன், சக்திவேல் மற்றும் அவரது மனைவி ஆண்டாள் ஆகியோர் கார்த்திக் வீட்டுக்கு சென்று தட்டிக்கேட்டனர். அப்போது, கார்த்திக்கிற்கு ஆதரவாக அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி பன்னீர் (35) என்பவர் சக்திவேலுக்கு போன் செய்து மிரட்டினார். இதனால், இரு தரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இதன் பிறகு, அக்கம்பக்கத்தினர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பினர்.

Advertising
Advertising

இதற்கிடையில், நேற்று காலை பாண்டியன் வீட்டிற்கு அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பாண்டியன் (25) என்பவர் வந்து பாண்டியனிடம் பன்னீர் பேச வேண்டும் என கூறி வீட்டில் இருந்து அழைத்து கொண்டு நடந்து சென்றார். அப்போது, அதே பகுதி பாட்டாளி தெரு வழியாக வந்தபோது அங்கு மறைந்திருந்த  ரவுடி பன்னீர், கார்த்திக் உள்ளிட்ட சிலர் பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களுக்கிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அக்கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து பாண்டியனை சரமாரியாக தலையில் வெட்டினர். இதில், அவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்து திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து ரவுடி பன்னீர் தலைமையிலான 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories: