×

கொரோனா ஊரடங்கால் கடத்தல் கும்பல் அட்டூழியம்; குமரி காடுகளில் கொள்ளை போகும் மரங்கள்: யானைகளுக்கும் ஆபத்து

நாகர்கோவில்: கொரோனா ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் இல்லாததை பயன்படுத்தி, குமரி மாவட்ட வன பகுதிகளில் விலை உயர்ந்த மரங்கள் கொள்ளை போவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குமரி மாவட்ட வன பகுதிகளில் அரிய வகை விலங்குகள் மற்றும் அச்சுறுத்தப்படும் பட்டியலில் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு நிறுவனத்தால் பட்டியலிடப்பட்டுள்ள யானை, புலி, சிறுத்தை, நல்ல பாம்பு, மலைப்பாம்பு, ராஜநாகம் உள்ளிட்ட பல்வேறு விலங்கினங்களும், அரிய வகை பறவையான இருவாச்சி போன்ற பறவைகளும் இங்கு காணப்படுகின்றன. இங்குள்ள காடுகளில் தேக்கு, ஈட்டி, சந்தனம், வெண் தேக்கு உள்ளிட்ட உயர் ரக மரங்களும் உள்ளன.

கொரோனா காரணமாக நாடே முடங்கி கிடக்கிறது. பல்வேறு அரசு துறைகளும் கொரோனாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. கொரோனா அச்சத்தில் பல்வேறு அரசு துறைகளும் முடங்கி கிடக்கின்றன. அந்த வகையில் வனத்துறையும் தற்போது  செயல்பாடுகள் இல்லாத நிலையில் உள்ளது. இதை பயன்படுத்தி குமரி மாவட்ட வனக்கொள்ளையர்கள் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் இருந்து விலை உயர்ந்த மரங்களை கொள்ளையடித்து செல்கிறார்கள். ஊரடங்கு மற்றும் சமூக விலகல் என வன பகுதிகளில் மக்களின் நடமாட்டமும் இல்லாதது, கடத்தல் கும்பல்களுக்கு மிகவும் வசதியாகி இருக்கிறது.

கோடிக்கணக்கில் மதிப்புடைய  பெரிய மரங்கள் சட்ட விரோதமாக வெட்டி இரவு, பகலாக கொள்ளையடிக்கப்படுகிறது. குறிப்பாக பேச்சிப்பாறை நீர் தேக்கத்தின் பகுதியில் உள்ள மரங்களை வெட்டி, இரவில் படகுகளில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்து டெம்போக்களில் கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. மரங்களை வெட்டியதும், அதன் அடிப்பக்கத்திலும், தரையில் மீதமுள்ள பகுதிகளிலும் சீனியை வைத்து தீயால் எரித்து விடும் வழக்கமும் இருக்கிறது. சீனியை வைத்து எரிப்பதால் 10 அல்லது 15 ஆண்டுகளுக்கு முன் உள்ள பழமையான மரங்கள் என்ற தோற்றத்தை அது ஏற்படுத்தும். எனவே புதிதாக வெட்டியது போல் தெரியாது என வன ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

இவ்வாறு கடத்தப்படும் தடிகளை மலையோர பகுதிகளில் உள்ள சில மர அறுவை நிலையங்களில் வைத்து உடனே பலகையாக அறுத்தும் விடுவதாக கூறப்படுகிறது. தீவிர கண்காணிப்பில் இருக்கின்ற 15 சோதனை சாவடிகளில் சில  சோதனை சாவடிகளை தாண்டி தான் மரங்கள் கடத்தப்பட வேண்டும். சோதனை சாவடிகளை எளிதாக எந்தவித பிரச்சனையும், சிரமமும் இல்லாமல் கடப்பது எப்படி என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் மரங்கள் கடத்தலை தடுக்க சோதனை சாவடிகளை பலப்படுத்துவதுடன் உயர் அதிகாரிகள் அடிக்கடி விசாரணை மேற்கொண்டு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

மேலும் குமரி மாவட்ட வன பகுதியில் அன்னாச்சி பழங்களும் அதிகளவில் பயிரிட்டுள்ளன. இங்கு யானைகள் வரத்து அதிகமாக உள்ளது. கேரளாவில் நடந்தது போல் யானைகளுக்கு வெடி வைக்கும் நடைமுறையும் உள்ளன. எனவே இதையும் வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து யானைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

வனத்துறையினர் உடந்தையா?
குமரி மாவட்ட வன பகுதியில் பல தில்லுமுல்லுகள் செய்ததாக சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, விசாரணை வளையத்துக்குள் இருந்து வருகிறார்கள். மேலும் சில அதிகாரிகள் மீது 17-ஏ, 17-பி ஆகிய துறை சார்ந்த நடவடிக்கைகள் நிலுவையில் இருந்து வருகிறது. வனத்துறையின் லஞ்ச ஒழிப்புதுறை விசாரணையும் நடைபெற்று வருகிறது. விசாரணைக்கு வந்தவர்கள் பல்வேறு முறைகேடுகள் நடந்ததை நேரடியாக கண்டறிந்துள்ளனர். குறிப்பாக குறைந்த எண்ணிக்கையில் மரங்களை வெட்டுவதற்கு பாஸ் வழங்கி விட்டு கூடுதல் மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது. மர துண்டுகள் அறுவை ஆலைகளில் இருந்து மரங்கள் மீட்கப்பட்டுள்ளன. எனவே முறையாக விசாரணை நடக்கும் பட்சத்தில் பல தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக, வன ஆர்வலர்கள் கூறி உள்ளனர்.


Tags : Corona Curfew Trafficking Gang Atrocity , Corona Curfew, Kumari Forest, Loot, Trees
× RELATED மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு...