அரசு கஜானாவில் பணம் இல்லையோ... அடுத்த ஓராண்டுக்கு புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட மாட்டாது : மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு

டெல்லி : கொரோனா எதிரொலியாக அடுத்த ஓராண்டுக்கு புதிய திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேசமயம் பிரதமரின் காரிப் கல்யாண் தொகுப்பு மற்றும் ஆத்மனிர்பர் பாரத் திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்புகளுக்கு மட்டுமே செலவு அனுமதிக்கப்படும் என்றும் இவற்றை தவிர இந்த நிதியாண்டில் வேறு எந்த திட்டத்திற்கும் ஒப்புதல் அளிக்கப்படாது என்றும் மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால் நிதிச்சுமை உருவாகி உள்ளதை கருத்தில் கொண்டு, நிதித்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதிய அரசு திட்டங்கள் எதுவும் அடுத்த ஓராண்டுக்கு நிறைவேற்றப்படாது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களும் துணை திட்டங்களும் கூட செயல்படுத்தப்படாது. பிரதமர் அறிவித்த விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ. 500 நிதி, ரூ. 20 லட்சம் கோடி ரூபாய்க்கான தற்சார்பு பொருளாதார திட்டங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆகவே புதிய திட்டங்களுக்கு நிதி கோருவதை நிறுத்திக் கொள்ளுமாறு, அனைத்து துறைகளையும் நிதித்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. விதி விலக்காக அரசு நிதி செலவீனத்துறை ஒப்புதல் அளிக்கும் திட்டங்களுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய நிதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories: