புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலம் அழைத்து வர அனைத்து மாநில அரசுகளுக்கும் 15 நாள் அவகாசம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலம் அழைத்து வர அனைத்து மாநில அரசுகளுக்கும் 15 நாள் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறது. ஏற்கனவே நடந்த விசாரணையில், புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் எத்தனை தொழிலாளர்கள் உள்ளனர் என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அந்த மாநிலங்கள் தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதுகுறித்து மராட்டிய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், மராட்டியத்தில் இருந்து 11 லட்சம் புலம்பெயர் தொழிலாளர் சொந்த மாநிலம் சென்றுவிட்டதாகவும், 38 லட்சம் தொழிலாளர்கள் இன்னும் மராட்டியத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், குஜராத்தில் 22 லட்சம் தொழிலார்களில் 20.5 லட்சம் பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரமானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், சுமார் 40,000 புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் தமிழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளதாகவும், சுமார் 3 லட்சத்து 28 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தமது விரிவான பதிலை தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தபோது, ஜூன் 3ம் தேதி வரை இந்திய ரயில்வே 4,228 ரயில்களை இயக்கியுள்ளதாகவும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு விநியோகத்திற்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி தான் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், இது உங்கள் மனசாட்சியை பூர்த்தி செய்வதற்காக மட்டுமே, ஒரு நலன்புரி அரசாக, எங்களால் முடிந்ததை நாங்கள் செய்துள்ளோம் என கூறினார். அப்போது டெல்லி அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சஞ்சய் ஜெயின், சுமார் 2 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தற்போது வரை டெல்லியலேயே இருப்பதாக தகவல் தெரிவித்தார். அவர்களில் வெறும் 10,000 பேர் மட்டுமே தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், மீதுமுள்ளவர்கள் டெல்லியிலேயே தங்கப்போவதாகவும் கூறினார்.

இதையடுத்து, உத்தரப்பிரதேச அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.நரசிம்மா, எந்த நேரத்திலும் தொழிலாளர்களிடம் அரசு கட்டணம் வசூலிக்கவில்லை. 1664 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் ஒரு அசாதாரண நடவடிக்கையில் ஏற்பாடு செய்யப்பட்டன. இதுவரை 21.69 லட்சம் மக்கள் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர் என கூறினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலம் அழைத்து வர அனைத்து மாநில அரசுகளுக்கும் 15 நாள் அவகாசம் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது, அனைத்து மாநிலங்களும் புலம்பெயர்ந்தோருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: