'குற்றம் 23'பட பாணியில் பெண்ணிடம் தகராறு: விந்தணுவிற்காக ரூ. 25 லட்சம் பணம் கேட்டு மிரட்டியவர் கைது

சென்னை : குற்றம் 23 திரைப்பட பாணியில் வங்கி பெண் அதிகாரியை மிரட்டி விந்தணுவிற்காக ரூ.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.நடிகர் அருண் விஜய் நடித்து ஹிட் ஆன திரைப்படம் குற்றம் 23. அதில் டெஸ்ட் டியூப் பெண்ணுக்கு விந்தணுவை தானம் செய்து விட்டு குழந்தை பிறப்பதற்கு முன்பு அவர்களை மிரட்டி பணம் பறிப்பதை ஒரு கும்பல் வழக்கமாகக் கொண்டிருக்கும். அதே பாணியில் சென்னையில் நடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertising
Advertising

சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலைப் பகுதியை சேர்ந்த ராணி(பெயர் மாற்றப்பட்டுள்ளது), வங்கி ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கடந்த 2017ம் ஆண்டு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ராணி பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். அச்சமயம் ராணி வேலை பார்க்கும் வங்கிக்கு, சென்னை பெரிய மேடு பகுதியைச் சேர்ந்த ரபியா பஸ்ரின் என்ற பெண் அவ்வப்போது வருவது வழக்கம். இதனால் ராணிவுக்கும், அந்த பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவரது கணவரான நாகூர் மீரானும் குடும்ப நண்பர் போல, ராணிவிடம் பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனக்குக் குழந்தை இல்லாதது குறித்து நாகூர் மீரானிடம், ராணி கூறி வருத்தப்பட்டுள்ளார்.

இதையடுத்து நாகூர் மீரான் மற்றும் ரபியா பஸ்ரின், தங்களுக்கு நன்கு தெரிந்த மருத்துவர் ஒருவர் திண்டுக்கல்லில் இருப்பதாகவும், அவரிடம் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அவர்கள் இருவரும் கூறியதை நம்பிய கவிதா, திண்டுக்கல் சென்று அவர்கள் குறிப்பிட்ட மருத்துவர் உமாராணியிடம் சிகிச்சை பெற்று டெஸ்ட் டியூப் மூலம் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இதற்காக ராணி நாகூர் மீரான் குடும்பத்திற்கு 13 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்துள்ளார்.

இருப்பினும் நாகூர் மீரான், குழந்தை பிறந்ததற்கு காரணம் தனது விந்தணுக்கள் என்றும் அதனால் தனக்கு ரூ.25 லட்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு ராணி ஒத்துழைக்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று ராணிவின் வீட்டிற்கு வந்த நாகூர் மீரான், ராணிவை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு பணத்தைக் கொடுக்கவில்லையென்றால் குழந்தைகளை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக ராணி எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் எழும்பூர் போலீசார் நாகூர் மீரானை கைது செய்தனர். அவர் மீது 294(பி) (தரக்குறைவாக திட்டுதல்), 354 (மானபங்கப்படுத்துதல்), 448 (அத்து மீறி உள்ளே நுழைதல்), 506(2) கொலை மிரட்டல் மற்றும் பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணைக்குப் பின்னர் மீரானை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவலர்கள் அவரை சென்னை புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: