கோகர்ணா

நன்றி குங்குமம் முத்தாரம்

Advertising
Advertising

கர்நாடகாவின் வடக்கு கனரா மாவட்டத்தில் உள்ள கும்தா தாலுகாவில் உள்ளது கோகர்ணா என்ற சிறிய கோயில் டவுன். கோகர்ணா என்றால் பசுவின் காது என்று பொருள்.     இங்கு கங்காவதி மற்றும் ஆகாஸ்வாணி நதிகள் இணையும் இடம் பசுவின் காதுபோல் அமைந்துள்ளது. மகாபாரத பீமனுக்கு, சிவன் பசுவின் காதில் காட்சியளித்த இடம். கோகர்ணா கடற்கரையில் ஒரு மலை கடலில் உட்புகுந்து காது போன்ற அமைப்பை உருவாக்கியுள்ளது தனி அழகு. கோவா செல்ல விரும்புபவர்கள் அங்கே குவியும்  கூட்டத்திற்கு பயந்தால் இருக்கவே இருக்கு கோகர்ணா. இங்கு அழகான ஐந்து கடற்கரைகள் உள்ளன. சுத்தமான கடற்கரை, பளிங்கு போன்ற நீர் கூடுதல் சிறப்பு. வானில் பறப்பதற்காக வான்குடை மிதவையை அணிந்தபடி இயந்திரப்படகின் பின்புறம் கட்டி இழுத்துச்செல்லப்படும் விளையாட்டும் இங்கே உண்டு. இது தவிர,  நீர்ச் சறுக்கு விளையாட்டும் இங்கே களைகட்டும்.

இதுபோக பல நீர் சார்ந்த சாகச விளையாட்டுகளுக்கு அற்புத இடம் இது. அக்டோபர்  முதல் மார்ச் வரைக்கும் இங்கே விசிட் அடித்தால் சிறப்பாக இருக்கும். ஏப்ரல்-மே மாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வெப்பம் அதிகமாக இருக்கும். சுற்றிலும் மலைகள், காட்டு விலங்குகள், நதிகள், ஏரிகள் என இயற்கைக் காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை. கூடுதலாக மகாபலேஸ்வர் கோயில் வேறு உள்ளது. இங்குள்ள லிங்கத்தை நீங்களே தொட்டு அபிஷேகம் செய்யலாம். பரசுராமர் கேரளாவை உருவாக்கியபோது கன்னியாகுமரி முதல் கோகர்ணா வரைதான் கேரளாவை அமைத்தார். பிறகு காலத்தால் சுருங்கிவிட்டது என்ற கதை கூட உண்டு. கோவாவை 500 ஆண்டுகளுக்கு முன் போர்த்துக்கீசியர்கள் பிடித்து, மதமாற்றத்துக்கு முயற்சித்தபோது, தப்பி வந்தவர்கள் கோகர்ணாவில்தான் குடியேறினர். மங்களூர்-மும்பை கொங்கன் ரயில் பாதையில் கோகர்ணா ரோட்டில் இறங்கி, 6 கிலோமீட்டர் பயணித்தால் கோகர்ணத்தை அடையலாம். மங்களூரிலிருந்து பேருந்து வசதியும் இருக்கிறது.

தொகுப்பு: ராஜிராதா

Related Stories: