கவுன்டரில் கூட்டத்தை குறைக்க நடவடிக்கை; ரயில் டிக்கெட்களை ரத்து செய்து கட்டணத்தை திரும்ப பெற 6 மாதம் அவகாசம்..தெற்கு ரயில்வே அறிவிப்பு...!

சென்னை: ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களுக்கான பணம் திரும்பப் பெற 6 மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து  ஏராளமான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பொதுமக்கள் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்களை ரத்து செய்தனர். மேலும் ரயில் டிக்கெட்டை ரத்து செய்ய 3 மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 21ம் தேதி தொடங்கி  வரும் ஜூன் 21ம் தேதி வரை ரத்து செய்யப்படும் ரயில்களுக்கான முன்பதிவு செய்த டிக்கெட்களை அளித்து கட்டணத்தை திரும்பப் பெற 3 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே, தெற்கு ரயில்வே சார்பில் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு பணம் திருப்பி வழங்குவதற்கான பட்டியல் மற்றும் எந்தெந்த ரயில் நிலையங்களில் உள்ள கவுன்டர்களில் பெற்று கொள்ளலாம் என்பதற்கான பட்டியல்  தயார் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட ரயில் நிலையங்களில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்ட்ரல், எழும்பூர், சென்னை கடற்கரை, மயிலாப்பூர், மாம்பலம், தாம்பரம், மவுண்ட், செங்கல்பட்டு, திண்டிவனம், பெரம்பூர், ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, வாலாஜா ரோடு, ஆம்பூர், குடியாத்தம், வாணியம்பாடி,  ஜோலார் பேட்டை உள்ளிட்ட 19 ரயில்நிலையங்களின் சிறப்பு கவுன்டர்களில் ரத்து செய்த டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை பயணிகள் திரும்ப பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், ரயில் நிலைய கவுன்டர்களில் கூட்டம் கூடுவதை தடுக்கும் வகையில், முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்களை ரத்து செய்ய விரும்பினால் அவர்களுக்கும் கட்டணத்தை திரும்ப பெற 6 மாதங்கள் கால அவகாசம் அளிக்கப்படுகிறது. கவுன்டர்களில் முன்பதிவு செய்தவர்கள் டிக்கெட்டை கவுன்டர்களிலேயே பணம் திரும்பப் பெறலாம். ரத்து செய்ய போதிய அவகாசம் உள்ளதால் தேவையின்றி கவுன்டர்களில் கூட வேண்டாம் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: