×

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 8ம் தேதி முதல் தரிசனம் செய்ய அனுமதி..: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டார் அறங்காவலர் குழுத்தலைவர்!

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 8ம் தேதி முதல் தரிசனம் தொடங்கப்படவுள்ளதாக அறங்காவலர் குழுத்தலைவர் சுப்பா ரெட்டி தகவல் தெரிவித்துள்ளார். மேலும் கோவிலில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் அவர் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது..

* திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 8, 9 தேதிகளில் தேவஸ்தான ஊழியர்களுக்கு தரிசனம் வழங்கப்படும்.

* 10ம் தேதி உள்ளூர் பக்தர்களுக்கும், 11ம் தேதி அனைத்து வித பக்தர்களுக்கும் தரிசனம் செய்து வைக்கப்படும்.

* தரிசனம் பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் அல்லது திருப்பதியில் டிக்கெட் வழங்கப்படும்.

* 3000 டிக்கெட் ஆன்லைனிலும், 3000 டிக்கெட் திருப்பதியிலும் வழங்கப்படும்.

* 65 வயதிற்கு மேல் உள்ள முதியவர்கள் மற்றும் 10 வயதுக்குட்பட்டவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.

* நாடு முழுவதும் உள்ள கண்டெய்ன்மண்ட பகுதியில் உள்ளவர்கள் வரக்கூடாது.

* தெப்பக்குளத்தில் பக்தர்கள் குளிக்க அனுமதி இல்லை, என கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், 11ம் தேதி முதல் காலை 6.30-7.30 வரை மட்டுமே வி.ஐ.பி. தரிசனம் நடைபெறும். அதேபோல், மாலை 4 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலைப்பாதையில் அனுமதிக்கப்படுவர். கடந்த சில மாதங்களாக வன விலங்குகள் நடமாட்டம் உள்ளதால் அலிபிரி மலைப்பாதையில் மட்டும், காலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படும். அலிபிரி அருகே தர்மல் சோதனை செய்யப்படுவதோடு, வாகனம் மற்றும் வாகனத்தில் பயணம் செய்பவர்கள் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பிறகு அனுமதிக்கப்படுவர். மொட்டை அடிக்கும் கல்யாண கட்டா, மற்றும் உண்டியல் உள்ள பகுதியில் பக்தர்கள் மனநிலை பாதிக்காத வகையில் அந்த பகுதியில் கிருமிநாசினி வைத்து சுத்தம் செய்த பிறகு அனுமதி வழங்கப்படும்.

தீர்த்தம் மற்றும் சடாரி வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் தேவஸ்தான நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். 1 மணி நேரத்திற்கு 500 பக்தர்கள் வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள், ஆன்லைனிலேயே அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒரு அறைக்கு இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். குறிப்பாக, அறைகள் 24 மணி நேரத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். 24 மணி நேரம் தாண்டிய பிறகு கட்டாயம் அறையை காலி செய்ய வேண்டும். மேலும், 5 மொழிகளில் பக்தர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்படும். மொட்டை அடிக்கும் கல்யாண கட்டாவில் சவர தொழிலாளார்களுக்கு பி.பி.இ முழு உடல் கவச உடை வழங்கப்பட உள்ளது.

தரிசனத்திற்கு செல்லும் வைகுண்டம் காம்ப்ளக்சில் தர்மல் சோதனை செய்து கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பிறகு அனுமதி வழங்கப்படும். ஒரு மணி நேரத்திற்கு 5000 பக்தர்கள் வரை தரிசனம் செய்து வந்த நிலையில் தற்போது ஒரு மணி நேரத்திற்கு 500 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். உண்டியல் அருகே மூலிகை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்த பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கோயிலுக்கு அன்னபிரசாதம் விநியோகம் செய்வதற்கு மாநில அரசு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. லட்டு பிரசாதம் விநியோகம் செய்யும் கவுண்டர்கள் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்யப்படும். தரிகொண்ட வெங்கமாம்பா அன்னபிரசாத கூடத்தில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்த பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படும்.

வைகுண்டம் காத்திருப்பு அறையில் 500 பேர் இருக்க வசதி இருந்தாலும் 100 பேர் மட்டும் அனுமதிக்கப்படுவர். அதுவும் தேவைப்படும் பட்சத்தில் மட்டும் பயன்படுத்தப்படும். இல்லாவிட்டால் நேரடியாக தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். திருமலையில் ஓட்டல்கள், கடைகளில் காலாவதியான உணவு பொருட்களை கட்டாயம் அகற்ற வேண்டும். இல்லையெனில், இரண்டு நாட்களில் இதுகுறித்து ஆய்வு செய்து அவை அகற்றப்படும். மத்திய அரசு கூறியுள்ள நிபந்தனைகள் சரியான முறையில் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க மூத்த அதிகாரிகள் நியமிக்கபட உள்ளனர். திருமலையில் கல்யாண மண்டபம், மற்றும் மடங்களில் 50 பேருக்கு மேல் சேராத வகையில் திருமணம் செய்ய அனுமதிக்கப்படும்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், கோவிந்தராஜா சுவாமி கோயிலிலும் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். பக்தர்கள் கூட்டத்தை பொறுத்து டிக்கெட் ஒதுக்கப்படும். திருப்பதியில் உள்ள தேவஸ்தான ஓய்வறைகளும் பக்தர்களுக்கு ஒதுக்கப்படும். 11ம் தேதி முதல் தரிசனத்திற்கு செல்ல 8ம் தேதி முதலே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜுன் மாதத்திற்கான கேட்டா முழுவதும் 8ம் தேதி முன்பதிவு செய்து கொள்ளலாம். வெளி மாநிலத்தில் இருந்து வருபவர்கள் டிக்கெட் பெறுவதுடன் அந்தந்த மாநில அனுமதி இபாஸ் பெற வேண்டும். வெளி மாநில பக்தர்கள் ஆந்திர மாநில அரசின் அனுமதி(இபாஸ்) கட்டாயம் பெற வேண்டும். ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் அனைத்து உற்சவங்களும் பக்தர்கள் இல்லாமல் தற்போது நடைபெறுவது போன்றே வரும் சில காலங்களிலும் நடைபெறும், என அவர் கூறியுள்ளார்.


Tags : Thirupathi Ezumalayayan ,Thirupathi Ezumalayayan Temple , Tirupati, Temple, Devotees, Darshan, Board of Trustees, Subba Reddy
× RELATED தமிழ்நாட்டில் 39 தொகுதியில் வேட்பு...