புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான வழக்கு: தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

புதுடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகிறது. ஏற்கனவே நடந்த விசாரணையில், புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்ப எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் எத்தனை தொழிலாளர்கள் உள்ளனர் என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கானது இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில் புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான விரிவான பதிலை தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதாவது, சுமார் 40,000 புலம்பெயர் தொழிலாளர்கள் ரயில் மற்றும் பேருந்துகள் மூலம் தமிழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளதாகவும், சுமார் 3 லட்சத்து 28 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரேஷன் பொருட்கள், உணவு, ரயில் கட்டணம் உள்ளிட்டவற்றிற்காக தமிழக அரசு சார்பில் சுமார் 163 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாகவும், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 212 முகாம்கள் செயல்பட்டு, அதில் 231 உணவு கூடங்கள் அமைக்கப்பட்டு நாள்தோறும் சுமார் 8,000 பேருக்கு உணவு வழங்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, புலம்பெயர் தொழிலாளர்களுக்காக 1070 என்ற உதவி எண் 24 மணி நேரமும் இயங்கி வருவதையும், அதில் சுமார் 1 லட்சத்து 11 ஆயிரம் அழைப்புகள் கிடைக்கப்பபெற்று அதில் 1 லட்சம் அழைப்புகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதையும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. அதேபோல், வெளிமாநிலங்களில் உள்ள தமிழர்களுக்காக ஒரு பிரத்யேக இணையதளமும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த மாநிலத்துக்கு திரும்புவதற்காக பதிவு செய்துகொள்ள ஒர பிரத்யேக இணையதளத்தையும் உருவாக்கி, அரசு அதை செயல்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மாவட்ட அளவிலான உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதையும், தமிழக அரசு தமது விரிவான பதிலில் குறிப்பிட்டுள்ளது.

Related Stories: