கொரோனா மையமான பிரேசில்: ஒரே நாளில் 1,500 பேர் பலியான நிலையில் உயிரிழப்பில் 3வது இடம் சென்றது!

பிரேசில்: கொரோனாவில் கோரப்பிடியில் சிக்கியுள்ள பிரேசில், உயிரிழப்பு எண்ணிக்கையில் இத்தாலியை தாண்டி 3வது இடத்திற்கு சென்றுள்ளது. பிரேசிலில் கடந்த மாதத்தில் கொரோனா பாதிப்பு 5 மடங்காக அதிகரித்துள்ளது. அந்த நாட்டில் 24 மணி நேரத்தில் புதிதாக 34,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 6 லட்சத்து 16 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,500 பேர் பலியானதை அடுத்து உயிரிழப்பு பட்டியலில் இத்தாலியை தாண்டி 3வது இடத்திற்கு சென்றுவிட்டது. பிரேசிலில் இதுவரை 34,039 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமேசானாஸ் மாகாணத்தில் வாழும் பழங்குடியின மக்களும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதால் வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது பெரும் சவாலாக மாறியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து பேசிய பிரேசில் மருத்துவர் எல்டோ ஹோம்ஸ், மனாஸ் நகரத்தில் நோய் தாக்கம் அதிகரித்துவிட்டது.

Advertising
Advertising

ஊரகப் பகுதிகள், ஆற்றங்கரையோரங்களில் வசிப்பவர்கள் மற்றும் பழங்குடியின மக்களையும் கொரோனா தாக்க தொடங்கியிருக்கிறது. பழங்குடியின மக்களுக்கு சிகிச்சையளிக்க தனிவார்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை கண்டறியவே தனிவார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. அமேசானாஸ் மாகாணத்தில் வாழும் பழங்குடியின மக்களை காப்பது பிரேசில் நாட்டின் முக்கிய கடமையாகும். நாங்கள் அதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம், என கூறியுள்ளார். கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் 19 லட்சத்து 24 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அங்கு நேற்று ஒரே நாளில் 22,000 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் 1,000 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 173 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் 66 லட்சத்து 98 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 லட்சத்து 93 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகிவிட்டனர். 32 லட்சத்து 49 பேர் கொரோனாவின் பிடியில் இருந்து மீண்டுள்ளனர்.

Related Stories: