×

ஊரடங்கால் மேலும் இருண்டு போச்சு வாழ்க்கை உழைத்து வாழத் தயார், உதவ அரசு தயாரா?: ஒருவேளை உணவோடு 2 மாதத்தை கடத்திய பார்வையற்றோர்

நெல்லை: ஊரடங்கால் கடந்த 2 மாதங்களாக ஒருவேளை உணவுடன் காலத்தை தள்ளிய பார்வையற்றோர் தாங்கள் சுயதொழில் செய்ய தயாராக இருப்பதால் அரசு உதவிக்கரம் நீட்டவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவிற்குள் புகுந்த கொரோனாவின் ஆட்டம் எப்போது முடிவுக்கு வரும் என யாருக்கும் தெரியாது. ஆனால் அதன் கோர வலைக்குள் சிக்கிய பலதரப்பினரின் வாழ்க்கை சின்னாபின்னமாகியுள்ளது. கொரோனா பரவல் தடுப்பதற்காக 5ம் முறையாக ஊரடங்கு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டாலும் பலர் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து விட்டனர். அன்றாடம் உழைத்தால்தான் உணவு என்ற நிலையில் இருந்தவர்களின் நிலைமை இப்போது மேலும் மோசமாகிவிட்டது. கூலி தொழிலாளர்கள் பலர் வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர். இதில் மாற்றுத் திறனாளிகளின் நிலைமை மேலும் மோசமாகி உள்ளது. குறிப்பாக உலகை உணர்வால் மட்டுமே காணும் பார்வையற்றவர்கள் பலர் கடந்த 2 மாதங்களாக வறுமையின் எல்லைக்கு சென்று இன்னும் மீள முடியாத பள்ளத்தில் விழுந்து கிடக்கின்றனர்.பெரும்பாலான பார்வையற்றவர்கள் உயிர் வாழ்வதற்காக யாரிடமும் கையேந்தி யாசகம் பெறுவதில்லை. மற்றவர்களைவிட அதிக தன்னம்பிக்கை மிக்க அவர்கள் தங்களால் இயன்ற சுயதொழிலை செய்து அதில் கிடைக்கும் வருவாயிலேயே வாழ்க்கை நடத்துவர். சேர், கட்டில்களுக்கு வலை பின்னுவது. பேனா போன்ற ஸ்டேஷனரி, பலூன், விளையாட்டு பொருட்கள், கடலை மிட்டாய் போன்ற பாக்கெட் உணவுப்பொருட்கள் போன்றவைகளை ஒரு பையில் எடுத்துக்ெ காண்டு சிறிய குச்சியின் உதவியுடன் அதிகாலை வீட்டை விட்டு புறப்படுபவர்கள் மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் பல மணி நேரம் நின்று கொண்டே தாங்கள் கொண்டு வந்து பொருட்களை விற்று அதில் கிடைக்கும் சொற்ப வருவாயுடன் வீடு திரும்புவர். இந்த வருவாயை கொண்டே தங்கள் பிள்ளைகளை படிக்க வைப்பது முதல் அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டனர்.

கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு கடுமையாக இருந்த போது பார்வையற்றவர்களின் வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி போய் விட்டது. வெளியில் மக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில் இவர்களது வருவாய் வழிகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் ரொக்கம் சில நாட்களுக்கு கூட உதவவில்லை. இப்போதும் தங்களுக்கு அரசு சிறிய அளவிலான தொழிலுக்கு முதலீடு செய்ய வட்டியில்லா கடன் அல்லது உதவித்தொகை வழங்கினால் வாழ வழி இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் உள்ளனர். இதுகுறித்து நெல்லை மகாராஜநகரை சேர்ந்த 60 வயது பார்வையற்ற முதியவர் வீரபாண்டி கூறியதாவது, “எனது ெசாந்த ஊர் எட்டயபுரம். 1971ல்  பாளை பார்வையற்றோர் பள்ளியில் சேர்ந்து 8ம் வகுப்பு வரை பயின்றேன். அதன் பின்னர் வெளியில் வந்து 10ம் வகுப்பு பயின்றேன். எனது மனைவிக்கும் பார்வை கிடையாது. எனக்கு 2 மகள்கள் உள்ளனர். ஆரம்பம் முதல் எனக்கு யாரும் உதவவில்லை. 10ம் வகுப்பு முடித்ததும் அப்போது லாட்டரி சீட்டுக்கு அனுமதி என்பதால் அதை விற்பனை செய்து வந்தேன். முக்கிய சாலைகளில் லாட்டரி சீட்டுகள் விற்று அதன் மூலம் வாழ்ந்தேன், அதற்கு தடை விதித்த பின்னர். கடலைமிட்டாய் உள்ளிட்ட திண்பண்டங்களை மொத்தமாக வாங்கி அரசு தனியார் அலுவலக ஊழியர்களிடம் நேரில் சென்று விற்பேன். தற்போது சிறுவர்களுக்கு உரிய பலூன், கலர் லைட் பொம்மை போன்றவைகளை விற்கிறேன். காலை 7 மணிக்கு வீட்டை விட்டு புறப்பட்டு டவுன் வரை தனியாக நடந்து சென்று விற்பனை செய்து திரும்புவேன்.

2 மாதமாக கொரோனாவுக்காக தீவிர தடை விதிக்கப்பட்டிருந்தபோது எங்கும் செல்லமுடியவில்லை. உணவுக்கு மிகவும் சிரமப்பட்டோம். தெரிந்தவர்கள் சிலர் வந்து உணவு பொருட்களை கொடுத்து உதவினர். எனக்கு வயதாகி விட்டதாலும் போக்குவரத்து நெரிசலில் பார்வையில்லாமல் தனியாக நடந்து செல்வது கடினமாக இருப்பதாலும்  நான் வசிக்கும் பகுதியில் அரசு சிறிய கடை வைத்து கொடுத்தால் பெரும் உதவியாக இருக்கும். ஏற்கனவே இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறேன் என்றார். பெரியசாமி (பார் வையற்றோர் நிவாரண சங்க ஒருங்கிணைப்பாளர், புதியம்புத்தூர்): நான் கட்டில், சேர் வலை பின்னும் தொழில் செய்து பிழைக்கிறேன். அவ்வப்ேபாது நெல்லைக்கு வந்து ஆர்டர்களை பெறுவேன். கொரோனாவின் காரணமாக பிறப்பிக்கப்பட்ட தடை காரணமாக எனக்கு மட்டுமின்றி என்னனைப் போன்ற பல பார்வையற்றவர்கள் வாழ்க்கையில் தீராத சோதனையை சந்தித்தனர். பலர் ஒரு வேளை உணவை மட்டும் உண்டனர். மதுரை, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் இருந்து வேனில் வந்து தென் மாவட்டங்களில் இசை நிகழ்ச்சி செய்து மக்கள் வழங்கும் பணத்தில் வாழ்ந்து வந்த பார்வையற்ற இசை குழுவினரும் 2 மாதமாக கடும் சிரமத்தை சந்தித்தனர். அவர்கள் உள்மாவட்ட அளவில் கூட நகரும் வாகன இசை நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. உழைத்து வாழும் பார்வையற்றவர்களுக்கு அவர்கள் என்ன தொழில் செய்கிறார்களோ அதற்கு ஏற்ப அரசு நிதி உதவி செய்ய உதவிக்கரம் நீட்ட வேண்டும். கொரோனா காலத்தில் நகர் பகுதியில் உள்ள பார்வயைற்றவர்கள்கூட ஓரளவு நிவாரணம் கிடைத்ததால் சமாளித்தனர். ஆனால் கிராமப்பகுதிகளில் இருப்பவர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். உதவி செய்ய என்னை தேடிவந்தவர்களை அழைத்து சென்று கிராமத்தில் தவித்த பார்வையற்றவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்தோம் என்றார்.

செல்வின் ராணி (சிவந்திபட்டிரோடு, பாளை): எனது தந்தை ஐசக் சாமுவேல் பார்வையற்றவர். அவர் இறந்துவிட்டார். நான் சிறுபிள்ளையாக இருக்கும்போதோ தந்தை கட்டில் வலையை வேகமாக பின்னுவார். நானும் அந்த தொழிலை கற்றுக்கொண்டு இப்போது அவருக்கு பின்னரும் இதை செய்கிறோம். எங்களை சுற்றி வசிக்கும் பல ஏழை பார்வையற்றவர்கள் உள்ளனர். அரசு பார்வையற்றவர்களுக்கு சுயதொழில் செய்ய மேலும் உதவியும் ஊக்கமும் அளிக்கவேண்டும் என்றார்.

வருவாய் இன்றி திணறிய 1500 பார்வையற்றவர்கள்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் சுமார் 2500க்கும் மேற்பட்ட பார்வையற்றவர்கள் உள்ளனர். இவர்களில் 165 பேர் மாணவர்களாக உள்ளனர். இவர்கள் பார்வையற்றோர் பள்ளியில் பயின்று வருகின்றனர். சுமார் 1500க்கும் மேற்பட்டவர்கள் எந்தவித நிரந்தரத் தொழில், வருவாயும் இல்லாதவர்கள். இவர்கள் அன்றாடம் கிடைக்கும் உழைப்பு ஊதியத்தில் வாழ்ந்து வருகின்றனர். இரண்டு மாத ஊரடங்கு காலத்தில் இவர்கள்தான் உணவுக்கு மிக அதிகமாக சிரமப்பட்டனர். பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய உதவி இவர்களுக்கு அவ்வப்போது கை கொடுத்துள்ளது. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பஸ் பாஸ் வசதி இருந்தும் 2500 பேரில் சுமார் 824 பேர் மட்டுமே பஸ் பாஸ் பெற்றுள்ளனர். இவர்கள் மற்றொருவர் துணையுடன் மட்டுமே பஸ்சில் பயணிக்க முடியும் என்பது போன்ற சிரமங்கள் இருப்பதால் இவர்களில் பலர் பஸ் பாஸ் பெறாமல் காலத்தை தள்ளுகின்றனர்.

Tags : government ,world , government ready , help and help,people?
× RELATED இந்தியாவில்,1 லட்சம் மக்கள்தொகைக்கு...