கொரோனா ஊரடங்கால் வைகாசி விசாக நாளில் வெறிச்சோடிய திருச்செந்தூர்

திருச்செந்தூர்: வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் நேற்று சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. ஊரடங்கால் பக்தர்கள் அனுமதிக்கப்படாததால் கோயில் வளாகம், கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது.ஆன்மீக சுற்றுலா தலமான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் அறுபடை வீடுகளில் 2ம்படை வீடாக திகழ்கிறது. இக்கோயிலில் தைப்பூசம், கந்தசஷ்டி என வருடம் முழுவதும் திருவிழா களைகட்டும். உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வர். கொரோனா பரவலால் கடந்த மார்ச் 20ம்தேதி முதல் கோயில் மூடப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஆகம விதிப்படி கோயிலில் 9 கால பூஜைகள் மட்டும் நடந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று வைகாசி விசாக திருவிழாவையொட்டி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. முருகனின் அவதார நாளாக கொண்டாடப்படும் வைகாசி விசாக நாளில் சுவாமி தரிசனம் செய்தால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பதால் இந்தநாளில் திருச்செந்தூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோயில் வளாகம் மற்றும் கடற்கரை பகுதிகள் பக்தர்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. உள்ளூரைச் சேர்ந்த புதுமண தம்பதிகள் மற்றும் பொதுமக்கள் கோயில் நுழைவுப் பகுதியில் நின்று கோபுர தரிசனம் செய்து வழிபட்டனர்.

Related Stories: