வனப்பகுதிகளில் தவிக்கும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மாஞ்சோலைக்கு முறையாக பஸ்கள் இயக்கப்படுமா?: கொரோனாவால் தொடரும் திண்டாட்டம்

அம்பை: மேற்குத்தொடர்ச்சி மலையில் சாரல் தென்படும் நிலையில், மாஞ்சோலை பகுதிக்கு பஸ்களை முறையாக இயக்கிட அரசு போக்குவரத்து கழகம் முன்வர வேண்டும். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வனப்பகுதியில் வசிக்கும் சூழலில், அவர்கள் நகர்புறங்களுக்கு வந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். நெல்லை மாவட்ட வனப்பகுதிகளில் இயற்கை சூழலுக்கு மணிமுத்தாறு, மாஞ்சோலை பகுதிகள் பெயர் பெற்றதாகும். இதமான தென்றல் காற்றும், மேற்குத் தொடர்ச்சி மலையின் குளுமையும், நீண்டு விரியும் வனங்களும் பார்ப்பவர்களை பரவசப்படுத்தும். மணிமுத்தாறு அருவிக்கு மேல் காணப்படும் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி ஆகிய இ டங்களில் சுமார் 800 குடும்பங்கள் தொழில் நிமித்தம் வசித்து வருகின்றன. இவர்கள் அனைவரும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கவும், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக அடிக்கடி நகர்புறங்களுக்கு வந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவர்களது உறவினர்களும், அம்பை, பாபநாசம், நெல்லை சுற்றுவட்டாரங்களில் வசிப்பதால், மலைப்பகுதியில் இருந்து அடிக்கடி பஸ்சில் வந்து செல்வது வழக்கம். ஆனால் கடந்த ஓராண்டாகவே மாஞ்சோலை சுற்றுவட்டார மக்களுக்கு போதிய பஸ் வசதிகள் கிடையாது. ஏதாவது ஒரு காரணத்தை காட்டி அரசு போக்குவரத்து கழகம் பஸ்களை நிறுத்தி விடுகிறது.

நெல்லையில் இருந்து குதிரைவெட்டிக்கும், பாபநாசம் மற்றும் தென்காசியில் இருந்து ஊத்து பகுதிக்கும் மொத்தம் 3 பஸ்கள் மாஞ்சோலை பகுதிக்கு இயக்கப்பட்டு வந்தது. இப்பஸ்களை பயன்படுத்தி நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தாங்கள் செல்ல வேண்டிய பகுதிகளுக்கு மாஞ்சோலையில் வசிக்கும் மக்கள் சென்று வந்தனர். ஆனால் சமீபகாலமாக பஸ்கள் இயக்கத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஓராண்டுக்கு முன்பு வனத்துறை அருவிச்சாலை சீரமைப்பு எனக்கூறி மாஞ்சோலைக்கு செல்லும் பஸ்களை நிறுத்தியது. பின்னர் மாஞ்சோலை பகுதியில் பாலம் சீரமைப்பு என்ற பெயரில் பஸ்கள் இயக்கம் தடைபட்டது. அடிக்கடி வெள்ளப்பெருக்கு என்பதை காரணம் காட்டியும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் கொரோனாவை காரணம் காட்டி பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கடந்த ஜூன் 1ம் தேதி பொது போக்குவரத்து தொடங்கிய நிலையிலும், மாஞ்சோலை, ஊத்து பகுதிகளுக்கு பாபநாசத்தில் இருந்து செல்லும் பஸ் மட்டுமே சென்று வருகிறது. மற்ற பஸ்களுக்கு அனுமதியில்லை. இதனால் மலைப்பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் திண்டாடி வருகின்றனர். ஒரு பஸ்சில் முதல் நாள் நகரத்திற்கு வந்துவிட்டு, மறுநாள் மலைப்பகுதிக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே மாஞ்சோலை மலைப்பகுதி மக்களின் நலன் கருதி பஸ்களை முறையாக இயக்கிட வனத்துறையும், அரசு போக்குவரத்து கழகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயணிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை

மின்வாரிய ஊழியர்கள், காவல்துறை, வனத்துறையினர், அணை பாதுகாப்பு போலீசார், தோட்ட தொழிலாளர்கள் மட்டுமே தற்போது பஸ்சில் மாஞ்சோலை, ஊத்து செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு அங்கு செல்ல அனுமதி கிடையாது. இந்நிலையில் மணிமுத்தாறு சோதனை சாவடியில் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 99 டிகிரி இருந்தாலே அவர்கள் பஸ்சில் இருந்து இறக்கி விடப்படுகின்றனர். மற்றவர்கள் மட்டுமே பஸ்சில் மலைப்பகுதிகளுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

Related Stories: