×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் சிப்காட் தொழிற்சாலைகளை நம்பியிருந்த 17ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு: ரூ.750 கோடி வருவாய் இழப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனாவால் சிப்காட் தொழிற்சாலைகளை நம்பியிருந்த 17 ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் ₹750 கோடி வரையில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை அடுத்த சிப்காட்டில் கடந்த 1972 ம் ஆண்டு முதல் ராணிப்பேட்டை சிப்காட் திட்ட அலுவலகத்துடன் கூடிய சிப்காட்  வளாகம் மற்றும் சிட்கோ தொழில் வளாகம் தொடங்கப்பட்டது. மேற்கண்ட சிப்காட் சிட்கோ ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட தோல் மற்றும் ஷூ தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தோல் மற்றும் ஷூ தொழிற்சாலைகளில் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தோல் மற்றும் ஷூ தொழிற்சாலைகளில் ₹750 கோடி வரை அந்நிய செலவாணி ஈட்டித்தந்தவாறு தொழில்கள் நடைபெற்று வந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால் ஊரடங்கு தடை உத்தரவு அமலில் இருப்பதால் மேற்கண்ட தோல் மற்றும் ஷூ தொழிற்சாலைகள் அனைத்தும் முடங்கியுள்ளது. இந்த தொழிற்சாலைகளை நம்பியிருந்த 15ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தோல் தொழிற்சாலைகளுக்கு ₹250 கோடி நஷ்டமும் ஷூ தொழிற்சாலைகளுக்கு ₹500 கோடி வரையிலும்  நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர டிரை யூனிட் கம்பெனிகள் 100 உள்ளன. இதிலும் 2ஆயிரம்  பேர் வேலை செய்து வந்தனர். மேற்கண்ட இந்த டிரை யூனிட்டிலும் வேலை செய்துவந்த 2 ஆயிரம் ஆண் பெண் தொழிலாளர்கள் தொழிற்சாலைகள் இயங்காததால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. அதோடு இந்த தொழிற்சாலை பணியாளர்களுக்கான போக்குவரத்துக்காக வேன், கார் உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு இயக்கி வந்த டிரைவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிற்சாலைகள் 2 மாதகாலமாக மூடப்பட்டிருந்ததால், அவர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இதனை கவனத்தில் கொண்டு தோல் மற்றும் ஷூ கம்பெனிகள், டிரை யூனிட்கள் ஆகிய தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வந்த ஆண், பெண் தொழிலாளர்கள் மற்றும் கார், வேன் டிரைவர்களுக்கு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : factories ,district ,Corona ,Ranipet , Livelihood,17,000 workers , Chipkat factories by Corona, Ranipet district, Rs.
× RELATED பொது முடக்கம் காரணமாக நெருக்கடியில்...