வண்டியும் ஓடல... வாழ்க்கையும் ஓடல...: தனியார் பஸ் தொழிலாளர்கள் தவிப்பு

சிதம்பரம்: கொ ரோனா ஊரடங்கு பல தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டு விட்டது. அந்த வகையில் தனியார் பஸ் போக்குவரத்து இன்னும் துவங்கப்படாததால் அதன் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். அரசு அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் சுமார் 580 தனியார் பேருந்துகள் உள்ளன. மாவட்டத்திலுள்ள சிதம்பரம், கடலூர், விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும், கடலூர் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களுக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது. சராசரியாக ஒரு பேருந்துக்கு டிரைவர்கள், கண்டக்டர்கள், செக்கர் மற்றும் மெக்கானிக் என 7 முதல் 8 பேர் வரை பணியாற்றுகின்றனர். இப்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் சுமார் 4 ஆயிரம் பேர் வரை பணியாற்றி வருகின்றனர். அண்டை மாவட்டங்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டும்.

ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதல் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது. போக்குவரத்து நிறுத்தப்பட்டு கிட்டத்தட்ட 70 நாட்கள் கடந்து விட்ட நிலையில், வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து வறுமையில் வாடுகின்றனர் தனியார் பஸ் தொழிலாளர்கள். கடந்த 1ம் தேதி முதல் பொது போக்குவரத்து துவங்கும் என அரசு அறிவித்தது. அதன்படி 50 சதவீத அரசு பேருந்துகள் மட்டுமே தற்போது இயக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகள் இன்றுவரை இயக்கப்படவில்லை. 1ம் தேதி தேதி முதல் பஸ்கள் ஓடும், இழந்த வாழ்வாதாரத்தை மீண்டும் பெறலாம் என காத்திருந்த தொழிலாளர்களுக்கு தனியார் பஸ் போக்குவரத்து துவங்காதது அவர்கள் தலையில் மேலும் ஒரு பேரிடியாக விழுந்தது. ஏற்கனவே ஊரடங்கால் வருவாய் இல்லாமல் வறுமையில் வாடும் தனியார் பஸ் தொழிலாளர்கள் தற்போது மீண்டும் நெருக்கடியான நிலைக்கு ஆளாகி உள்ளனர்.

ஊரடங்கால் வீட்டில் முடங்கி கிடந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் சார்ந்த தனியார் பஸ் முதலாளிகள் இரண்டு கட்டங்களாக நிவாரண உதவிகளை வழங்கினர். இதுதவிர சமூக ஆர்வலர்கள் அளித்த சில நிவாரண உதவிகள்தான் ஓரளவு அவர்களது வாழ்க்கையில் பசி இல்லாமல் சாப்பிட வைத்திருக்கிறது. மற்றபடி அனைத்து அடிப்படை செலவுகளுக்கும் திண்டாடும் தனியார் பஸ் தொழிலாளர்கள், பஸ் எப்போது ஓடுவது, நம் வாழ்க்கை வண்டி எப்போது ஓடும் என்கிற பரிதவிப்பில் காத்திருக்கின்றனர். தனியார் பஸ்களை இயக்குவது குறித்து அரசு ஒரு நல்ல முடிவை எடுப்பது ஒருபுறம் இருந்தாலும், இந்த இடைப்பட்ட காலத்தில் தங்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த பஸ் தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

‘நிவாரணம் வழங்க வேண்டும்’

இது குறித்து சிதம்பரம் மோட்டார் தொழிலாளர் சங்க செயலாளர் ராஜசேகர் கூறுகையில், சுமார் 70 நாட்களாக பேருந்துகள் ஓடாததால் தனியார் பஸ் தொழிலாளர்கள் வறுமை நிலையில் உள்ளனர். பஸ் முதலாளிகள் உரிய நிவாரணங்களை அளித்தாலும் அது எங்களின் ஒட்டு மொத்த தேவைகளை நிறைவேற்றவில்லை. அதனால் தமிழக அரசு எங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இது குறித்து ஏற்கனவே தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை, என்றார்.

Related Stories: