×

விவசாயிகளுக்கு ரூ.2 கோடி நிலுவை வைத்த வியாபாரிகள் தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் நிறுத்தம்: கண்காணிப்பாளர் அதிரடி

வந்தவாசி: வந்தவாசி அடுத்த தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்கு, வியாபாரிகள் ₹2 கோடி வரை நிலுவை வைத்துள்ளதால், நெல் கொள்முதல் செய்வதற்கு கண்காணிப்பாளர் தடை விதித்துள்ளார். வந்தவாசி அடுத்த தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பாஞ்சரை, தென்தின்னலூர், மழையூர், அரியம்பூண்டி, சீயமங்கலம், வெடால், சித்தருகாவூர் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து, கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேசூர், சேத்துப்பட்டு, மழையூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பதிவு பெற்ற 5 வியாபாரிகள் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ₹2 கோடிக்கும் அதிகமான தொகையை வியாபாரிகள் தரவேண்டி உள்ளதாம். எனவே, விவசாயிகள் தங்களுக்கான பணத்தை, ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் லோகேஷிடம் கேட்பதால், கடந்த மே 20ம் தேதி வரை கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளுக்கு பணம் கொடுத்த பிறகுதான், நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என அவர் கடந்த வாரம் எச்சரிக்கை செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஒரு வியாபாரி மட்டும் தொடர்ந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மற்ற பதிவுபெற்ற வியாபாரிகள், அனைவருக்கும் ஒரே நடைமுறைதான் இருக்க வேண்டும், எங்களை பணம் கட்டிய பிறகு நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி உள்ளீர்கள், ஆனால் அதிக நிலுவைத்தொகை வைத்துள்ள ஒரு வியாபாரி தொடர்ந்து நெல் கொள்முதல் செய்கிறார் எனக்கூறி நேற்று முன்தினம் கண்காணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.எனவே, வியாபாரிகள் நிலுவைத்தொகை செலுத்திய பிறகு தான் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என கண்காணிப்பாளர் நேற்று கண்டிப்பாக கூறினாராம். மேலும், நேற்று(வியாழன்) முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நெல் கொள்முதல் செய்வதை நிறுத்துவதாக கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். இதையடுத்து, தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் கொள்முதல் செய்வது நேற்று முதல் நிறுத்தப்பட்டது. வியாபாரிகள் வைத்துள்ள நிலுவைத்தொகை காரணமாக நெல் கொள்முதல் செய்வது நிறுத்தப்பட்ட சம்பவம் விவசாயிகளிடம் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Paddy Purchase Stop ,Desur Regulatory Outlet: Superintendent Action Desur Regulatory Outlet , Paddy Purchase, Desur Regulatory Outlet, Superintendent Action
× RELATED வேலூர் மத்திய சிறை காவலர்...