2 குழந்தைகளை கொன்று விடுவதாக பெண் வங்கி அதிகாரியிடம் 25 லட்சம் கேட்டு மிரட்டல்: தொழிலதிபர் கைது

சென்னை: எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள குடியிருப்பை சேர்ந்தவர் சக்தி (31). இவர், அண்ணாசாலையில் உள்ள வங்கி ஒன்றில் மேலாளராக உள்ளார். இவருக்கு, கடந்த 2000ம் ஆண்டு சிவகுருநாதன் என்பருடன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு குழந்தைகள் கிடையாது. இதனால், இருவரும் கடந்த 2017ம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சக்தி, கெல்லீஸ் சாலையில் உள்ள வங்கி கிளையில் வேலை செய்தபோது, வாடிக்கையாளர் ரிபாயா பஸ்ரின் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது, சக்திக்கு செயற்கை முறையில் கருத்தரிக்கும் யோசனையை ரிபாயா பஸ்ரின் கணவரும், தொழிலதிபரான நாகூர் மீரான் தெரிவித்துள்ளார். அதற்கு சக்தி சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நாகூர் மீரான் தனக்கு தெரிந்த டாக்டரிடம் சக்தியை அழைத்து சென்று செயற்கை முறையில் கருத்தரிக்க, தனது உயிர் அணுவை கொடுத்துள்ளார். அதன்படி, சக்தி செயற்கை முறையில் கருத்தரித்தார். அவருக்கு 2 குழந்தைகள் பிறந்தது.

அதன் பிறகு சக்தியிடம் ரிபாயா பஸ்ரின் மற்றும் அவரது கணவர் நாகூர் மீரான் ஆகியோர் சிறுக சிறுக ₹13 லட்சம் வரை பெற்றுள்ளனர். அதை சக்தி திரும்ப கேட்டதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே சில மாதங்களாக இவர்கள் இருவருக்கும் சக்தி பணம் கொடுக்க மறுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாகூர் மீரான் செல்போனில் சக்தியை தொடர்பு கொண்டு இரண்டு குழந்தைகளும் என்னுடைய உயிர் அணுவில் பிறந்தது. எனவே எனக்கு 25 லட்சம் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு சக்தி மறுத்துள்ளார். அப்போது, நான் கேட்ட பணத்தை கொடுக்க வில்லை என்றால் 2 குழந்தைகளையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

மேலும், சக்தி வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்று நாகூர் மீரான் பணம் கேட்டு மிரட்டி, தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சக்தி சம்பவம் குறித்து எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் நாகூர்மீரான் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர்.

Related Stories: