தாவரவியல் பூங்கா புல் மைதானம் பராமரிப்பு பணிகள் துவக்கம்

ஊட்டி: ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் உள்ள அனைத்து புல் மைதானங்களிலும், புற்கள் வளர்ந்த நிலையில், அதனை பராமரிக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, ேகாடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும், மலர் கண்காட்சியும் நடத்தப்படுகிறது. இதற்காக, பூங்காவில் உள்ள அனைத்து புல் மைதானங்கள் பராமரிக்கப்பட்டு பச்சை பசேல் என காட்சியளிக்கும். இம்முறை கடந்த மாதம் தொடர்ந்து சில நாட்கள் மழை பெய்ததால், புல் மைதானம் பச்சை பசேல் என காட்சியளித்தது.

ஆனால், சுற்றுலா பயணிகள் வராத நிலையில், புற்கள் அதிகளவு வளர்ந்தது. 2ம் சீசனுக்கான பராமரிப்பு பணிகள் தாவரவியல் பூங்காவில் துவக்கப்பட்டுள்ள நிலையில் புல் மைதானங்களை பராமரிக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது பூங்காவில் உள்ள அனைத்து புல் மைதானங்களில் வளர்ந்துள்ள புற்களை அகற்றி சமன் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளது. மழை துவங்கினால், அதிகளவு புற்கள் வளர்ந்துவிடும் என்பதால், தற்போதே புல் தரைகளை சமன் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: