9ம் நூற்றாண்டில் சோழர் ஆட்சி காலத்தில் சைக்கிள் இருந்ததா?

* கோயில் கல்வெட்டு மூலம் கண்டுபிடிப்பு

* மத்திய இணை அமைச்சரின் டிவிட்டரால் பரபரப்பு

சென்னை: கடந்த 9ம் நூற்றாண்டான சோழர் ஆட்சி காலத்தில் சைக்கிள் இருந்ததா? என்பது தொடர்பாக கோயில்களில் செதுக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட 3,470 பழமையான கோயில்கள் உள்ளது. இதில், 3ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட கோயில்களும் அடக்கம். இந்த கோயில்களில், சிலைகள், மன்னர்கள் மற்றும் அவர்களின் சின்னங்கள் மட்டுமின்றி பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் கூட கோயில்களின் சுவர்களில் வரையப்பட்டிருக்கும். இதை வைத்து தான் அந்த கோயில்கள் எத்தனை ஆண்டுகள் பழமையான கோயில்கள் என்பதை அறிய முடிகிறது. இந்த நிலையில் மத்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பட்டேல் உலக சைக்கிள் தினத்தையொட்டி டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள கோயில் ஒன்றில் செதுக்கப்பட்டுள்ள இந்த சைக்கிள்  2000 ஆண்டுகள் பழமையானதா என்பது தொடர்பாக கேள்வி எழுப்பி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு எதிராக பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். அதாவது, சைக்கிள் என்பது 200 ஆண்டுகளுக்கு முன்பு தான் கண்டுபிடிக்கப்பட்டது. அப்படியிருக்கும் போது சோழர் ஆட்சி காலத்தில் எப்படி சைக்கிளை கண்டுபிடித்து இருப்பார்கள் என்று சிலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதை தொடர்ந்து, உடனடியாக அந்த பதிவை மத்திய இணை அமைச்சர் நீக்கினார். இதை தொடர்ந்து, மத்திய இணை அமைச்சர் மீண்டும் டிவிட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவில், இந்த சைக்கிள் அருகே ஒருவர் நிற்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்ட அவர், இந்த சைக்கிள் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. திருச்சி பஞ்சவர்ணசுவாமி கோயில் கதவில் இந்த சைக்கிள் சின்னம் வரையப்பட்டுள்ளது. மேலும், அந்த கோயில் சோழர் ஆட்சி காலத்தில் 9 மற்றும் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்று பதிவிட்டுள்ளார்.

இந்த கோயில் சோழர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டிருப்பதாலும், அந்த காலகட்டத்தில் சைக்கிள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், ஒரு தரப்பினர் இந்த கோயில் பிரிட்டீஸ் ஆட்சி காலத்தில் புனரமைக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். அதாவது, கடந்த 1920 ஆண்டில் இந்த கோயில் புனரமைக்கப்பட்டு இருப்பதாகவும், அப்போது, இந்த சைக்கிள் புகைப்படம் வரையப்பட்டிருக்கலாம் ஒரு சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.ஆனால், இந்த கோயில்கள் கடந்த 1920ல் புனரமைக்கப்பட்டதா என்பது தொடர்பாக தமிழக அரசிடமும், தொல்லியல் துறையிடமும், இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்றும் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் சிலர் தெரிவித்தனர்.

Related Stories: