×

ஆயக்குடியில் உச்சத்தில் மா சீசன்: வரத்து குறைவால் விலை உயர்வு இடைத்தரகர்களால் லாபம் இல்லை

பழநி: பழநி அருகே ஆயக்குடியில் மா சீசன் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளது. அதேநேரம் இடைத்தரகர்களால் லாபத்தை இழப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். பழநி அருகே ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி பகுதிகளில் மாமரங்கள் அதிகளவு உள்ளன. இங்கு செந்தூரா, அல்போன்சா, பங்கனபள்ளி, கிரேப், கல்லாமை மா வகைகள் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் மா வகைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. வழக்கமாக மே, ஜூன் மாதங்கள் மாம்பழத்திற்கு நல்ல சீசன் ஆகும். கொரோனா தடுப்பு ஊரடங்கில் பெரிய அளவில் வியாபாரம் நடைபெறாமல் இருந்தது.தற்போது ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டுள்ளதால் ஆயக்குடியில் பிரசித்தி பெற்ற பழச்சந்தை சுறுசுறுப்படைந்துள்ளது. நேற்று மட்டும் சுமார் 100 டன் மா, கொய்யா பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வரத்து குறைவு, தேவை அதிகரிப்பின் காரணமாக மா, கொய்யா வகைகளை விற்பனை செய்த விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், இடைத்தரகர்கள் தலையீட்டின் காரணமாக விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காத சூழல் நிலவுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆயக்குடியை சேர்ந்த கலைச்செல்வன் கூறியதாவது, ‘ஆயக்குடி பழச்சந்தையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநிலங்களுக்கும் மா, கொய்யா வகைகள் கொண்டு செல்லப்படுகின்றன. கிருஷ்ணகிரியில் உள்ள பழச்சாறு தொழிற்சாலைகளுக்கும் இங்கிருந்தே பழங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. ஆனால், உரிய கொள்முதல் வழிமுறைகள் பின்பற்றப்படாததால் இடைத்தரகர்கள் தலையீடு அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. தற்போது இடைத்தரகர்களுக்கு கிலோ ஒன்றிற்கு சுமார் ரூ.5 வரை லாபம் கிடைக்கிறது.

நாளொன்றிற்கு சுமார் 100 டன் அளவுள்ள மா, கொய்யா வகைகள் தற்போது விற்பனை செய்யப்படுகின்றன. பழங்களை பதப்படுத்தும் நிலையம் இல்லாததால் விவசாயிகளால் பழங்களை இருப்பு வைத்து விற்பனை செய்ய முடியாத நிலை நிலவுகிறது. தமிழக அரசு இதுபோன்ற பழங்களை விற்பனை செய்ய குழுக்கள் ஏற்படுத்தி விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தவிர, ஆயக்குடியில் பழங்களை பதப்படுத்தும் நிலையம், பழச்சாறு அமைக்கும் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொய்யா சீசன் தற்போதுதான் துவங்கி உள்ளதால் 20 கிலோ ரூ.900 வரை விற்பனை செய்யப்படுகிறது. இது நல்ல விலை. வரத்து அதிகரித்தால் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது’ என்றார்.

Tags : Ayukkudi Peak ,Maa Season ,price hike , Maa Season, Ayukkudi Peak, inflation, price hike,not profitable to intermediaries
× RELATED விலைவாசி உயர்விற்கு ஒன்றிய அரசுதான் காரணம்: ஓபிஎஸ் குற்றச்சாட்டு