மேற்கு வங்க பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய எஸ்ஐ உட்பட 4 பேர் கைது

தஞ்சை: தஞ்சையில் மேற்கு வங்க பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரத்தில், எஸ்ஐ உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.தஞ்சை-திருச்சி புதிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி-சானூர்பட்டி பிரிவு அருகே சாலையில் இளம்பெண் கடந்த 1ம் தேதி உடலில் காயங்களுடன் கிடந்தார். அந்த இடத்துக்கு சற்று தொலைவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாதர் சங்கத்தினர், அப்பெண்ணை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் கூறியதாவது: எனது சொந்த ஊர் மேற்கு வங்க மாநிலம் துர்காபூர். பல ஆண்டுகளாக பெங்களூருவில் பெற்றோருடன் வசித்து வந்தேன். பெங்களூருவில் உள்ள சித்தி மகள் சாந்தா மூலம் ஒருவர், கடந்த 4 மாதங்களுக்கு முன் என்னை அழைத்து வந்து தஞ்சாவூர் ஈஸ்வரி நகரில் உள்ள ஒரு வீட்டில் ‘வீட்டு வேலைக்கு’ என கூறி சேர்த்துவிட்டார். ஆனால் அங்கே இருந்தவர்கள் என்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் வீட்டிலிருந்த ஒரு பெண் உள்ளிட்ட 4 பேர் என்னை அடித்து கொடுமைப்படுத்தியதுடன் ஒரு வாகனத்தில் அழைத்து வந்து சாலையில் வீசி விட்டு சென்றுவிட்டதாக கூறினார். இதையடுத்து, வல்லம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி தஞ்சை மேலவஸ்தாசாவடியை சேர்ந்த செந்தில்குமார், அவரது மனைவி ராஜம் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிந்து தேடி வந்தனர். இந்நிலையில் நடராஜபுரம் காலனியில் ஒரு வீட்டில் பதுங்கியிருந்த செந்தில்குமார் (49), ராஜம் (49), பிரபாகரன், ராமச்சந்திரன் ஆகியோரை நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் பிரபாகரன் சில ஆண்டுகளுக்கு முன் வல்லம் காவல் நிலையத்தில் சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தபோது லஞ்சம் வாங்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: