கல்விக் கட்டணத்திற்காக நிதி நிறுவனங்களிடம் குழந்தைகளை அடகு வைப்பதா?: ராமதாஸ் கண்டனம்

சென்னை: கல்விக் கட்டணத்திற்காக குழந்தைகளை நிதி நிறுவனங்களிடம் அடகு வைப்பதா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  மும்பையை சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்துடன் தமிழகத்தைச் சேர்ந்த, அதிக கட்டணம் வசூலிக்கக் கூடிய பிரபல பள்ளிகள் கூட்டாண்மையை ஏற்படுத்திக் கொண்டு கல்வி கட்டண வசூலை நடத்துகின்றன.

Advertising
Advertising

இத்திட்டத்தின்படி ஒரு பள்ளியில் 1000 மாணவர்கள் படிப்பதாகவும், ஒவ்வொரு மாணவனும் செலுத்த வேண்டிய சராசரி கட்டணம் ரூ.50,000 என்றும் வைத்துக் கொண்டால், அந்த பள்ளிக்கு ஓராண்டு முழுவதும் செலுத்த வேண்டிய கட்டணத் தொகையான ரூ.5 கோடியை தனியார் நிதி நிறுவனம் மொத்தமாக செலுத்தி விடும்.  மேலோட்டமாக பார்க்கும் போது பெற்றோருக்கு உதவும் வகையில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதைப்  போலத் தெரியும். ஆனால், இது ஒரு வகையில் கந்து வட்டித் திட்டம் ஆகும். ஒரு பள்ளிக்கு ஓராண்டு கட்டணமாக ரூ. 5 கோடியை வழங்கும் தனியார் நிறுவனம், அதில் 12 விழுக்காட்டை, அதாவது ரூ.60 லட்சத்தை பிடித்தம் செய்து கொள்ளும். பிடித்தம் செய்யப்படும் தொகை 12 சதவீதம் மட்டும் தான் என்றாலும் கூட, அது முன்கூட்டியே பிடித்தம் செய்யப்படுவதாலும், ஒவ்வொரு மாதமும் பெற்றோர்கள் மூலம் அசல் தொகையை செலுத்தப்படுவதாலும் அனைத்து தவணைகளும் செலுத்தி முடிக்கப்படும் போது வட்டி விகிதம் 19.72 சதவீதம் ஆக இருக்கும். இந்த வட்டியை பள்ளி நிர்வாகங்களே ஏற்றுக் கொள்வது போன்று தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், எந்த பள்ளி நிர்வாகமும் இந்த வட்டியை ஏற்றுக்கொள்வதில்லை.

தனியார் நிதிநிறுவனம் வழங்கும் கடனுக்கு ஈடாக எதுவும் வழங்கத் தேவையில்லை என்று தனியார் நிதி நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், பெற்றோர்களிடமிருந்து சில ஆவணங்கள் பெறப்படுவதுடன், ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்தும் பெறப்படுகிறது. ஒருவேளை பெற்றோர்களால் இந்த கட்டணத்தை செலுத்த முடியாமல் போனால், அவர்கள் குழந்தைகளின் சான்றிதழ்களை பள்ளி நிர்வாகம் முடக்கி வைக்கும் ஆபத்து உள்ளது. இது குழந்தைகளை அடகு வைப்பதற்கு சமமானதாகும். கல்வி வழங்க வேண்டிய பள்ளிகள் பெற்றோர் மீது கந்து வட்டியை திணிப்பது கண்டிக்கத்தக்கதாகும். கல்விக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதுடன், அதற்காக கந்து வட்டிக்கு கடன் வாங்கவும் வலியுறுத்தும் பள்ளிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Related Stories: