×

எட்டு வழிச்சாலை வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

புதுடெல்லி: தேசிய நலன் சார்ந்த திட்டம் என்பதால் சேலம் -சென்னை எட்டு வழிச்சாலை தொடர்பான மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக எடுத்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சென்னை-சேலம் 8 வழிச்சாலைக்கு  விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து திட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த  உயர் நீதிமன்றம், அதுதொடர்பான அறிவிப்பு மற்றும் அரசாணை ஆகியவற்றை ரத்து செய்தது. உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மத்திய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், சேலம் சென்னை எட்டு வழிச்சாலை தொடர்பாக மத்திய அரசு தரப்பில் நேற்று ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், “நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவின்படி சேலம் சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் உருவாக்கப்பட்ட அனைத்து விவரங்கள் கொண்ட அறிக்கையும்  தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும் பல மாதங்களாக இந்த வழக்கு தொடர்ந்து நிலுவையில் உள்ளது. இது, ஒரு மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் தேசிய நலன் சார்ந்த திட்டம் என்பதால் நீதிமன்றம் அதனை கருத்தில் கொண்டு மனுவை அவசர வழக்காக மீண்டும் எடுத்து விசாரிக்க வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

  இதையடுத்து வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே கோரிக்கையை கடந்த டிசம்பர் மாதம்  வைத்தபோது, உங்கள் விருப்பப்படி வழக்கை விசாரிக்க முடியாது என்றும், பட்டியலிட்டால் நாங்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம் என மத்திய அரசு வழக்கறிஞரிடம் உச்ச நீதிமன்றம் காட்டமாக கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Supreme Court ,trial ,The Supreme Court , eight-way,Supreme Court, Central government ,petition
× RELATED கல்வியை கல்வியாளர்களிடம் விட்டுவிட...