காதலியை சேர்த்து வைக்கக் கோரி செல்போன் டவரில் ஏறி வாலிபர் போராட்டம்: திருமங்கலத்தில் பரபரப்பு

திருமங்கலம்: காதலித்த இளம்பெண்ணை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி, திருமங்கலத்தில் செல்போனில் டவரில் ஏறி வாலிபர் நேற்று போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம், திருமங்கலம், ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த பாண்டி மகன் பிரசாத்(24). எலக்ட்ரீசியன். இவர் பொற்கால நகரை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த 3 ஆண்டாக காதலித்து வந்துள்ளார். பெண்ணின் பெற்றோருக்கு தெரியவரவே கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். இதனால் மனவேதனையடைந்த பிரசாத், நேற்று திருமங்கலம் கணபதி நகரிலுள்ள 110 அடி உயரமுள்ள செல்போன் டவரின் உச்சிக்கு சென்றார். அங்கிருந்து தனது அம்மா மற்றும் உறவினர்களுக்கு, ‘காதலித்த பெண்ணை தன்னுடன் சேர்த்து வைக்கும்படியும், தவறினால் டவரிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வேன்’ என கூறியுள்ளார். தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். டவரில் ஏறிய பிரசாத்தை மீட்க தீயணைப்பு படையினர் டவரில் ஏறியபோது, ‘‘யாரும் மேலே ஏறி வராதீர்கள்.

வந்தால் கீழே குதித்து விடுவேன்’’ என மிரட்டல் விடுத்தார். மேலும் கையில் பாட்டிலில் பெட்ரோல் வைத்திருந்ததால், தீயணைப்பு படையினர் மேலே ஏறும் முயற்சியை கைவிட்டனர். இதனை தொடர்ந்து பிரசாத்தின் அம்மா மற்றும் உறவினர்களை வரவழைத்து மைக் மூலமாக அவரிடம் பேசினர். ஆனால் எதனையும் வாலிபர் பிரசாத் ஏற்க மறுத்து, தனது காதலி அந்த இடத்திற்கு வந்தால் மட்டுமே இறங்கி வருவேன் என பிடிவாதமாக கூறி டவரின் உச்சில் அமர்ந்து கொண்டார். திருமங்கலம் ஆர்ஐ செந்தில்குமாரி மைக் மூலமாக பேசி கீழே இறங்கி வரும்படி வேண்டுகோள் விடுத்தும் நேற்று மாலை வரை பிரசாத் இறங்கவில்லை. தொடர் வேண்டுகோளுக்கு பிறகு இரவு 8.30 மணியளவில் கீழே இறங்கி வந்தார். இவரிடம் திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தினர்.

Related Stories: