உலக சுற்றுச்சூழல் தினத்தில், பூமியின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம் : பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி : உலக சுற்றுச்சூழல் தினத்தில், பூமியின் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி சர்வதேச சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இயற்கையான சுற்றுச்சூழலை காக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்த்தவே உலகம் முழுவதும் சுற்றுசூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, பல்லுயிர்ப் பெருக்கம் என்ற கருப்பொருளை முன்வைத்து உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. உயிரினங்களின் பன்முகத்தன்மையையும், பூமியில் வாழும் ஒவ்வொரு உயிரினமும் முக்கியம் என்பதையும் பல்லுயிர்ப் பெருக்கம் விளக்குகிறது.

இதை குறிப்பிட்டு, ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இந்த சுற்றுச்சூழல் தினத்தில், பூமியின் வளமான பல்லுயிர்ப் பெருக்கத்தை பாதுகாக்க உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார். நம்மோடு பூமியைப் பகிர்ந்து கொண்டுள்ள விலங்குகளும், தாவரங்களும் செழித்து வளர, நம்மால் இயன்ற அனைத்தையும் சேர்ந்து செய்வோம் என அவர் அழைப்பு விடுத்துள்ளார். வரும் தலைமுறையினருக்கு இன்னும் சிறந்த பூமியை விட்டுச் செல்வோம் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Related Stories: