தலைமை செயலகத்தை விரட்டி விரட்டி தாக்குது மக்கள் தொடர்பு பெண் அதிகாரி மற்றும் அவரது உதவியாளருக்கும் கொரோனா: உயர் அதிகாரிகள், ஊழியர்கள் அச்சம்

சென்னை: தலைமை செயலகத்தில் உள்ள மக்கள் தொடர்பு பெண் அதிகாரி மற்றும் அவரது உதவியாளருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பணிபுரியும் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அச்சம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினசரி நோய் பாதிப்பு ஆயிரத்தை தாண்டும் நிலை ஏற்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் டாக்டர்கள், செவிலியர்கள், போலீசார் என கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு, தற்போது அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். இதுதவிர மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் வீட்டிலேயே தங்கி இருப்பதால், வெளியில் தெரிவதில்லை. இந்த பரபரப்பான சூழ்நிலையில் சென்னை, தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 9வது மாடியில் பணியாற்றி வந்த மக்கள் தொடர்பு துறை பெண் அதிகாரி மற்றும் அவரது உதவியாளர் ஒருவருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, அந்த அலுவலகத்தில் உள்ள மற்ற பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. செய்தி பிரிவு பெண் அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த தளத்தில் உள்ள மற்ற ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். ஊரடங்கு தளர்த்தப்பட்டு கடந்த மாதம் 18ம் தேதி முதல் தலைமை செயலக ஊழியர்கள் பணிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அங்கு மட்டும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மிக நெருக்கமாக இருந்தபடி பணியாற்றி வருகிறார்கள். கடந்த இரண்டு வாரத்தில் தலைமை செயலகத்தில் முதல்வரின் செயலாளர் பிரிவு, தமிழ் வளர்ச்சி துறை, நிதித்துறை, பொதுப்பணி துறை, சமூகநலத்துறை, பொது கணக்கு குழு ஆகிய துறைகளில் பணிபுரியும் 20க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதால், அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் அச்சத்துடனே பணிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. ஊழியர்கள் பணிக்கு வரும் எண்ணிக்கையை 33 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று தலைமை செயலக சங்க நிர்வாகிகள், ஏற்கனவே முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். முதல்வர், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் தினசரி வந்து செல்லும் தலைமை செயலக ஊழியர்களை கொரோனா விரட்டி விரட்டி தாக்குவதால் அனைவரும் அச்சத்தில் உள்ளனர்.

Related Stories: