கார், பணத்துக்கு ஆசைப்பட்டு தந்தையே விவாகரத்தான 25 வயது பெண்ணை 18 வயது மகனுக்கு மணமுடிக்க முயற்சி:வேலூரில் பரபரப்பு

வேலூர்:  வேலூர் அடுத்த அரியூர் பகுதியைச் சேர்ந்தவர் 18 வயது சிறுவன். இவரது உறவினரான 25 வயது பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் நடந்தது. ஆனால் குடும்ப பிரச்னை காரணமாக கணவரை விவாகரத்து செய்துவிட்டு தாய் வீட்டில் வசித்து வருகிறார். தனது மகளை 2வதாக திருமணம் செய்பவருக்கு கார் மற்றும் பணம் அதிகளவில் தருவதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதையறிந்த சிறுவனின் தந்தை கார், பணத்துக்கு ஆசைப்பட்டு, அந்த பெண்ணை தனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அவரது  பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் சம்மதம் தெரிவித்ததையடுத்து திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடந்து வந்தது.இந்த திருமணத்துக்கு சிறுவனின் தாய் மற்றும் சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ஆனாலும் அதனை கண்டுகொள்ளாத சிறுவனின் தந்தை, திருமண ஏற்பாடுகளை மும்முரமாக செய்து வந்தாராம். வரும் 12ம் தேதி திருமணம் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளனர்.இதுகுறித்து சிறுவனின் தாய் வேலூர் மாவட்ட சமூகநலத்துறை அலுவலரிடம் புகார் செய்தார். அதன்பேரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய பணியாளர்கள் மற்றும் அரியூர் போலீசார் நேற்றுமுன்தினம் அந்த சிறுவனின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அவருக்கு 18 வயதே ஆவது தெரிய வந்தது. ஆண்களுக்கு திருமண வயது 21. எனவே சிறுவனுக்கு திருமணம் செய்யக்கூடாது. இதை மீறி திருமணம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது.

Related Stories: