வித்தியாசமான மாடல்கள், விதவிதமான கலர்கள் சென்னையில் தெருவுக்கு தெரு முளைத்துள்ள சாலையோர கடைகளில் மாஸ்க்குகள் விற்பனை

* நடைபாதை வியாபார பட்டியலில் சேர்ந்தது

* வருமானம் கிடைப்பதால் வியாபாரிகளான இளைஞர்கள்

சென்னை: தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பரவல் என்பது கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. தற்போது 5ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், தளர்வுகள் என்ற பெயரில் அனைத்தும் இயங்க தொடங்கிவிட்டன. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.  வெளியில் யார் சென்றாலும் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்றும், மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும் தமிழக அரசு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் கொரோனாவின் பிடி இறுகி வரும் நிலையில், மக்கள் மத்தியில் கொரோனா குறித்த அச்சத்தால் மாஸ்க் அணிவதை கடைபிடிக்க தொடங்கியுள்ளனர்.  மாஸ்க் அணியாமல் யாராவது பேச்சு கொடுத்தால் தலை தெறிக்க ஓடும் நிலை தான் சென்னையில் இருக்கிறது. மேலும் போலீசாரும் மாஸ்க் அணியாமல் வாகனங்களில் வருபவர்களை பிடித்து ரூ.500 வரை அபராதம் போடுகின்றனர்.  இதனால் மாஸ்க் அணியாமல் சென்னையில் யாரும் செல்ல முடியாத நிலை உள்ளது. இதை பயன்படுத்தி ஆங்காங்கே சாலை ஓரங்களில் புதிதாக மாஸ்க்குகள் விற்பனை செய்யும் கடைகள் முளைத்துள்ளன. ேகாடை குளிர்பான விற்பனை போன்று மாஸ்க் கடைகள் முளைத்துள்ளன.  இந்த கடைகளை பெரும்பாலும் வேலை இல்லாமல் வீடுகளில் முடங்கியிருந்த  இளைஞர்கள் உள்பட பலரும் விதவிதமான கலர் மாஸ்க்குகளை வாங்கி சாலையோரம் நின்று பொதுமக்களை கவர்ந்து இழுக்கின்றனர்.  இதை பலர் போட்டி போட்டு வாங்குகின்றனர்.  

இதனால் சாலையோர கடைகளில் மாஸ்க்குகள் விற்பனை சூடு பிடித்துள்ளது. சிலர் சைக்கிளை அலங்கரித்து அதில் பார்ப்பதற்கு சுண்டி இழுக்கும் வகையில் வித விதமான மாஸ்க்குளை தொங்கவிட்டுள்ளனர்.  இவற்றை பலரும் தங்களின் ஆடைகளின் நிறத்துக்கு ஏற்றவாறு ஒன்று முதல் 5க்கும் மேற்பட்ட அளவில் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.   அனைவரும் வாங்கி செல்லும் வகையில் ரூ.30 முதல் ரூ.500 வரையிலான பல மாடல்களில் மாஸ்க்குகள் சென்னை தெருக்களை அலங்கரிப்பதோடு விற்பனையும் அமோக உள்ளதாக இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.  இதுகுறித்து, மாஸ்க் விற்பனையாளர் ஒருவர் கூறுகையில்,‘‘கொரோனாவால் வேலை இல்லாமல் வீடுகளில் முடங்கி கிடந்தேன். வீட்டிலும்   செலவுக்கு பணம் கேட்க முடியவில்லை. அப்போது தான் திருப்பூரில் இருந்து கொண்டு வந்த மொத்த வியாபாரிகளிடம் வித விதமான மாடல்களில் மாஸ்குகளை மொத்தமாக கொள்முதல் செய்து விற்பனையை தொடங்கியுள்ளேன். நல்ல வருமானம் கிடைக்கிறது’’ என்றார். 

Related Stories: