புதுக்கோட்டை அருகே தந்தையால் சிறுமி நரபலி விவகாரம் பெண் மந்திரவாதி, உதவியாளர் கைது: திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே தந்தையால் சிறுமி நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் பெண் மந்திரவாதி, உதவியாளர் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக மாந்திரீக புத்தகங்கள், பொம்மைகள் கைப்பற்றப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (50). இவரது முதல் மனைவி இந்திரா, 2வது மனைவி மூக்காயி(45). இதில் முதல் மனைவியின் மகள் வித்யா (14) 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மே 18ம் தேதி ஏரிக்கு தண்ணீர் எடுக்க சென்றபோது படுகொலை ெசய்யப்பட்டார்.இதுதொடர்பாக, தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் பன்னீர்செல்வத்தின் உறவினர் குமார், அப்பகுதி விஏஓவிடம் சரணடைந்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சொத்து மற்றும் பணம் பெருக ஆசைப்பட்டு பன்னீர்செல்வமும், அவரது 2வது மனைவியும் சேர்ந்து பெண் மந்திரவாதி ஒருவரின் ஆலோசனைப்படி வித்யாவை நரபலி கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து குமாரையும், பன்னீர்செல்வத்தையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான புதுக்கோட்டையை சேர்ந்த பெண் மந்திரவாதி வசந்தி மற்றும் அவரது உதவியாளர் முருகாயி ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: மந்திரவாதி வசந்தி கடந்த 20 ஆண்டாக மாந்திரீகங்கள் செய்து வந்துள்ளார். வசியம் செய்வதிலும் கைதேர்ந்தவர். பன்னீர்செல்வத்துக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது. இதனால் மந்திரவாதி வசந்தியை அடிக்கடி சந்தித்துள்ளார். அப்போது தானும் மந்திரவாதியாக வேண்டும் என்று ஆசை வந்ததால் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் நள்ளிரவில் வசந்தி நடத்தும் பூஜையில் பன்னீர்செல்வமும் கலந்து கொள்வாராம். பல கோயில்களுக்கு இருவரும் சென்று வந்துள்ளனர். பன்னீர்செல்வத்தின் 2வது மனைவி மூக்காயிக்கு ஆண் வாரிசு இல்லாததால் கணவருடன் வந்து அடிக்கடி வசந்தியை சந்தித்துள்ளார். பன்னீர்செல்வத்துக்கு பணத் தேவை அதிகம் இருந்ததால் வசதி வாய்ப்பு பெருக வசந்தியின் ஆலோசனைப்படி மகளை நரபலி கொடுத்துள்ளார்.வசந்தி 2, 3 செல்போன்களையும் ஏராளமான சிம்கார்டுகளையும் வைத்து மாற்றி மாற்றி பயன்படுத்தி வந்துள்ளார். அவரது வீட்டில் கட்டுக்கட்டாக மாந்திரீகம் பற்றிய புத்தகங்கள், பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டன. வசந்தி தனக்கும், இந்த கொலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே கூறிவருகிறார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

சிலை கொள்ளை வழக்கில் தொடர்பு

பன்னீர்செல்வம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பொன்னமராவதி அருகே ராமர் கோயில் சிலை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தவர். கொத்தனாரான அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்துள்ளது. பன்னீர்செல்வத்திடம் நெருங்கி பழகிய பெண்கள் யார், சிறுமி நரபலி பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியுமா என தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் பன்னீர்செல்வத்தை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

2வது மனைவி அடித்து கொலையா?

பன்னீர்செல்வத்தின் 2வது மனைவி மூக்காயி கடந்த 30ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். அவரது தலையில் காயங்கள் இருந்துள்ளது. நரபலி கொடுத்த தகவலை மூக்காயி, உறவினர்கள் மற்றும் போலீசாரிடம் தெரிவித்துவிடுவார் என்று கருதி பன்னீர்செல்வமே அவரை அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Related Stories: