×

ராகுலுடன் ராஜிவ் பஜாஜ் கலந்துரையாடல் கொரோனாவை அழிப்பதற்கு பதிலாக பொருளாதாரம் அழிக்கப்பட்டு விட்டது: தீர்வு வரவில்லை என விமர்சனம்

புதுடெல்லி: நாட்டில் கடந்த 3 மாதங்களாக பரவி வரும் கொரோனா நோய் தொற்று பாதிப்பு மற்றும் அதனால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பொது மக்கள் மற்றும் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பல்வேறு நிபுணர்களுடன் காணொலி மூலமாக அவ்வப்போது கலந்துரையாடி வருகின்றார். இதன் தொடர்ச்சியாக ராகுல்காந்தி, பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் ராஜிவ் பஜாஜூடன் ஊரடங்கு காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்பு பற்றி நேற்று காணொலி மூலமாக கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலின்போது, ராஜிவ் பஜாஜ் கூறியதாவது: கொரோனா ஊரடங்கு தளர்வின்போது மென்மையான ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை நாம் பார்க்கவில்லை. ஒருபுறம் பலவீனமான ஊரடங்கானது வைரஸ் இன்னும் இருக்கிறது என்பதை உறுதி செய்கிறது. ஊரடங்கிற்கு பின்னரும் கூட வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகின்றது.

நீங்கள் கூறியதுபோல, கட்டுபாடுகளை நீக்கினால் கொரோனா வைரஸ் இன்னும் நம்மை தாக்குவதற்கு காத்திருக்கிறது. எனவே ஊரடங்கு மூலமாக கொரோனா வைரஸ் பாதிப்பு உயர்வு பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை. மாறாக நிச்சயமாக நாட்டின் பொருளாதாரம் அழிக்கப்பட்டுவிட்டது. உற்பத்தி உயர்வு விகித வளர்ச்சியை நாம் நிறுத்திவிட்டோம். துரதிஷ்டவசமாக கொரோனா தாக்கத்தின் தொடக்கத்தில் இருந்தே இந்தியா மேற்கத்திய நாடுகளை மட்டுமே உற்றுநோக்கி வந்தது. நாம் நோய் தொற்றால் பாதிக்கப்படாத நாடுகளையும் கவனித்து முன்னேற்பாடுகளை செய்திருக்க வேண்டும். பொருளாதாரத்தை மேம்படுத்துவது கடினமான பணியாகும். பிரதமரை தவிர வேறு யாராலும் மக்கள் மனதில் உள்ள அச்சத்தை வெளியேற்ற முடியாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : Rahul ,Rajiv Bajaj , Rajiv Bajaj's,discussion, Rahul, destroying corona
× RELATED திமுக இளைஞர் அணி நிர்வாகிகளுடன்...