டிஜிபி அலுவலகத்தில் எஸ்பி, மயிலாப்பூர் துணை கமிஷனர் உட்பட 11 போலீசாருக்கு கொரோனா: தொற்று எண்ணிக்கை அதிகரிப்பால் காவலர்கள் கலக்கம்

சென்னை: டிஜிபி அலுவலகத்தில் பணியாற்றும் எஸ்பி, 2 டிஎஸ்பிக்கள் மற்றும் மயிலாப்பூர் துணை கமிஷனர் உட்பட 11 போலீசாருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்று உறுதியானது. சென்னை மாநகரில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை கடந்து வருகிறது. குறிப்பாக கொரோனா ஊரடங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரிடையே நோய் தொற்றின் வேகம் தீவிரமாக உள்ளது. அந்த வகையில் தமிழகம் காவல் துறை இயக்குநர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவில் பணியாற்றி வரும் கண்காணிப்பாளர் ஒருவருக்கும், அவருடன் பணியாற்றும் 2 டிஎஸ்பிக்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதேபோல், சென்னை மாநகர காவல் துறையில் மயிலாப்பூர் துணை கமிஷனர் உட்பட 8 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து 2 எஸ்பிக்கள், 2 டிஎஸ்பிக்கள் உட்பட 11 பேரையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஐஐடி வளாகத்தில் உள்ள கொரோனா வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், அவர்களுடன் பணியாற்றி வந்த சக காவலர்களையும் அதிகாரிகள் தனிமைப்படுத்தியுள்ளனர். சென்னை மாநகர காவல் துறையில் நேற்று வரை கூடுதல் கமிஷனர், 4 துணை கமிஷனர்கள் உட்பட 394 போலீசார் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கூடுதல் கமிஷனர், 2 துணை கமிஷனர்கள் உட்பட 140 பேர் குணமடைந்து பணிக்கு திரும்பி உள்ளனர். அதேபோல், டிஜிபி அலுவலகத்தில் நேற்று வரை ஒரு கண்காணிப்பாளர், 3 டிஎஸ்பிக்கள் உட்பட 25 போலீசார் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர் தொற்று காரணமாக பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் மற்றும அவர்களின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Related Stories: