இனிமே வேறு ஊருக்கு போகவே மாட்டோம்... சுக்கா ரொட்டி சாப்பிட்டாவது இங்கயே பொழச்சிக்கிறோம் சாமீ...: புலம்பெயர் தொழிலாளர்கள் வேதனை

பாண்டா: ‘சொந்த ஊரை விட்டு வெளி மாநிலத்துக்கு செல்வதை விட, நாங்கள் சுக்கா ரொட்டி சாப்பிட்டாவது இங்கேயே பிழைத்துக் கொள்கிறோம்,’ என்று புலம் பெயர் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக அடுத்தடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு  காரணமாக லட்சக்கணக்கான புலம் பெயர் தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். போக்குவரத்து தடை காரணமாக நடை பயணமாகவும், வாகனங்களிலும், சைக்கிள்களிலும், இவர்கள் சொந்த மாநிலங்களுக்கு அல்லல்பட்டு திரும்பியுள்ளனர். இந்நிலையில், சொந்த மாநிலம் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையில்லாமல் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர். இது குறித்து புலம் பெயர் தொழிலாளர்கள், ‘இனி ஒருபோதும் எங்களது சொந்த மாநிலத்தை விட்டு செல்லமாட்டோம். எங்களது கிராமத்திலேயே எந்த வேலையாவது செய்து பிழைத்துக் கொள்வோம். வேறு மாநிலத்துக்கு செல்வதை விட சுக்கா ரொட்டியை சாப்பிட்டு கூட உயிர் வாழ்வோம். ஆனால், வெளி மாநிலங்களுக்கு செல்ல மாட்டோம்,’ என்று தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், பாண்டா மாவட்டத்தை சேர்ந்தவர் சிவ்லாகான். இவர் குஜராத் மாநிலம், சூரத்தில் துணி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். ஊரடங்கு நடவடிக்கை காரணமாக குஜராத்தில் இருந்து தனது மகள், கர்ப்பிணி மனைவியுடன் நடந்தே தனது பதவால் கிராமத்துக்கு வந்து சேர்ந்துள்ளார்.

அவர் கூறுகையில், “துணி தொழிற்சாலையில் நாள்தோறும் ரூ.550 தினக்கூலி பெறுவேன். ஊரடங்கு காரணமாக தொழிற்சாலை மூடப்பட்டு  விட்டது. நிலுவை சம்பளத்தையும் தராமல் உரிமையாளர் என்னை அனுப்பி விட்டார். எங்கு செல்வதற்கும் வழி இல்லாததால் சொந்த மாநிலத்துக்கு திரும்பி விட்டேன். பல்வேறு சிரமங்களை கடந்து சொந்த ஊர் வந்தடைந்தோம். எனக்கு இப்போதைக்கு எந்த வேலையும் இல்லை. ஆனால், சொந்த மாநிலத்தை விட்டு செல்லமாட்டோம்,” என்றார். இதேபோல், ஜவுளி தொழிற்சாலையில் மாதம் ரூ.11 ஆயிரம் சம்பளம் வாங்கி வந்த தீபக், தொழிற்சாலை மூடப்பட்டதால் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். பல்லியா செயின்பூரை சேர்ந்த இம்ரான் கான்(40) கூறுகையில், ‘‘நான் கடந்த இருபது ஆண்டுகளாக மும்பையில் பெயிண்டராக வேலை செய்து வந்தேன். ஆனால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் வாழ்வாதாரத்தை இழந்து விட்டேன். நான் எனது தந்தை, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை காப்பாற்றி வந்தேன். வேலை இல்லாததால் சொந்த ஊருக்கு திரும்பி விட்டேன். மீண்டும் மும்பை செல்லும் எண்ணமில்லை. அங்கு எனக்கு யாரும் உதவி செய்யவில்லை,” என்றார்.

Related Stories: