×

வந்தே பாரத் மிஷன் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 7 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்: மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை அழைத்துவரும் மத்திய அரசின் வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் மூலம் இதுவரை ஒரு லட்சத்து 7 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்வஸ்தவா, முதல்கட்ட வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் 15 ஆயிரம் இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்பட்டனர்.

2ம் கட்டத்தில் 337 விமானங்கள் மூலம் 38,000 பேர் வரை அழைத்து வரப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 2ம் கட்ட வந்தே பாரத் திட்டத்தில் ஏர் இந்தியா நிறுவனம் 103 விமானங்களை இயக்குகிறது. ஒட்டுமொத்தமாக இதுவரை 454 விமானங்கள் பல்வேறு நாடுகளுக்கும் இயக்கப்பட்டு அதன் மூலம் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 123 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இதில் 17,485 பேர் புலம்பெயர் தொழிலாளர்கள், 11,511 பேர் மாணவர்கள், 8,633 பேர் பெரிய நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் ஆவர். நேபாளம், பூடான், வங்கதேசம் ஆகிய நாடுகளின் நில எல்லைகள் வழியாக 32,000 இந்தியர்கள் தாயகம் வந்துள்ளனர்.

தாயகம் வருவதற்காக ஒட்டுமொத்தமாக 3 லட்சத்து 48 ஆயிரத்து 565 இந்தியர்கள் இந்தியத் தூதரகத்தில் பதிவு செய்திருந்தனர். ஆனால், அரசின் விதிமுறைப்படி தவிர்க்க முடியாத காரணங்கள், கர்ப்பிணிப் பெண்கள், முதியோர், மாணவர்கள், வேலையிழந்து வெளியேற்றத்துக்காகக் காத்திருப்போர் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டுள்ளது. 3ம் கட்ட வந்தே பாரத் மிஷன் திட்டத்துக்கான பணிகள் நடந்து வருகின்றன. இதில் அதிகமான இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்படுவார்கள், என கூறியுள்ளார். முதல்கட்ட வந்தே பாரத் மிஷன் திட்டம் மே 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Indians ,Ministry of Foreign Affairs ,home , Vande Bharat Mission, Indians, Homeland, Central Foreign Department, Corona
× RELATED போலி வைர மோதிரம் பரிசு வழங்கி மோசடி:...