×

கொரோனா பாதிப்பு காரணமாக 3 மாதம் சலுகை அளிக்கப்பட்ட கடனுக்கு வங்கிகள் வட்டி வசூலிக்க கூடாது

* உச்சநீதிமன்றம் வலியுறுத்தல்
* மத்திய நிதியமைச்சகத்துக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக 3 மாதம் இஎம்ஐ செலுத்த கால அவகாசம் வழங்கி விட்டு, அதற்கு கூடுதல் வட்டி வசூலிப்பது மிகத்தீவிரமான பிரச்னை என கூறியுள்ள உச்ச நீதிமன்றம், சலுகை அளிக்கப்பட்ட காலக்கட்டத்திற்கு வட்டி வசூலிக்கக் கூடாது என பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மக்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதால் மார்ச் மாதத்தில் செலுத்தப்பட வேண்டிய கடன்களுக்கு மே 31ம் தேதி வரை கால அவகாசம் அளிப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன்பின் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மேலும் 3 மாதத்திற்கு நீட்டித்து ஆகஸ்ட் 31ம் தேதி வரை கடன் இஎம்ஐ செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த கால அவகாசம் என்பது கடனை தாமதமாக செலுத்துவதற்கான கூடுதல் கால அவகாசம் மட்டுமே தவிர கடனோ, வட்டித் தொகையோ தள்ளுபடி செய்யப்படவில்லை. இந்நிலையில், வங்கி கடன் இஎம்ஐ செலுத்த தரப்படும் சலுகையை பயன்படுத்துவோருக்கு விதிக்கப்படும் கூடுதல் வட்டியை தள்ளுபடி செய்யக் கோரி ஆக்ராவை சேர்ந்த கஜேந்திர சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இதன்படி, வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், சஞ்சய் கிஷன் கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ரிசர்வ் வங்கி தனது பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்தது. அதில், ‘இஎம்ஐ சலுகை காலத்திற்கான வட்டியை தள்ளுபடி செய்வது சாத்தியமற்றது. இதனால் வங்கிகளின் நிதி நிலைத்தன்மை கடுமையாக பாதிக்கப்படும். கடன் வட்டி வருவாயையே வங்கிகள் அதிகம் நம்பி உள்ளன. தற்போது வட்டி தள்ளுபடி செய்யப்பட்டால், வங்கிகளுக்கு ரூ.2.01 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். இது நாட்டின் ஜிடிபியில் 1 சதவீதமாகும். இதனால் வங்கிகள் பாதிக்கப்படுவதோடு, அதில் பணத்தை டெபாசிட் செய்துள்ள மக்களும் பாதிக்கப்படுவார்கள்’ என கூறியிருந்தது. இதைக் கேட்ட நீதிபதிகள், ‘‘இந்த இக்கட்டான சூழலில், இஎம்ஐ செலுத்த கால அவகாச சலுகை தந்துவிட்டு, மறுபுறம் அதற்கு வட்டி வசூலிப்பது மிகத் தீவிரமான பிரச்னையாகும். அவகாசம் வழங்கிய சலுகை காலத்தில் கடன்களுக்கான எந்த வட்டியும் வசூலிக்கக் கூடாது அல்லது வட்டிக்கு வட்டி போடக் கூடாது என்ற இரண்டு விஷயங்களை நாங்கள் பரிந்துரைக்கிறோம். இதைப் பற்றி மத்திய நிதி அமைச்சகம் பதிலளிக்க வேண்டும்’’ என்றனர்.

இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, பதிலளிக்க அவகாசம் கோரினார். வரும் 12ம் தேதி வரை அவகாசம் கொடுத்து அன்றைக்கு வழக்கை ஒத்திவைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். வங்கிகள் கடன் இஎம்ஐ செலுத்த கால அவகாசம் வழங்கினாலும் கூட, அதற்கு கூடுதல் வட்டி செலுத்த வேண்டுமென்பதால் இந்த சலுகையால் பொதுமக்களுக்கு பெரிய அளவில் பயன் எதும் இல்லை. எனவே, வட்டி தள்ளுபடி செய்யப்பட்டால் மக்களின் பெரிய சுமை அகலும் என்பதால் இந்த வழக்கின் தீர்ப்பு பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Banks ,Corona , Banks , not charge, 3-month concession loan due, Corona's impact
× RELATED வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல்