×

கேரளாவில் நடந்த யானை கொலையில் 3 பேருக்கு தொடர்பு : முதல்வர் பினராய் விஜயன் தகவல்

திருவனந்தபுரம்: கேரளாவில் உணவு தேடி ஊருக்குள் வந்த கர்ப்பிணி யானையை அன்னாசிப் பழத்தில் வெடிவைத்து கொன்ற சம்பவத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்தார் . கேரளாவில் மலப்புரம் மாவட்டத்தில் அமைதிப்பள்ளத்தாக்கு உள்ளது. இங்குள்ள தேசிய பூங்காவில் மலப்புரம் நிலம்பூர் வன அதிகாரியான மோகன கிருஷ்ணன் கடந்த மே 25ம் தேதி ரோந்து சென்றார். அப்போது ஒரு காட்டு யானை ஆற்றுக்குள் நின்றுகொண்டிருந்ததை கண்டார். அருகில் ெசன்று பார்த்தபோது சுமார் 15 வயது மதிக்கத் தக்க அந்த பெண் யானையின் வாயில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது.இதுகுறித்து விசாரித்தபோது, இந்த யானை அடிக்கடி ஊருக்குள் வந்து வாழை, கரும்பு உட்பட விவசாய பயிர்களை சாப்பிட்டு செல்லுமாம். இதனால் கோபமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த மர்ம நபர்கள் ஊருக்குள் வந்த யானைக்கு அன்னாசிப் பழத்தில் வெடியை மறைத்து வைத்து கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு யானையை தண்ணீரில் இருந்து கரையேற்ற முயன்றனர். ஆனால் முயற்சி பலனளிக்கவில்லை. தண்ணீரை விட்டு ெவளியே வரமறுத்த யானை சிறிது நேரத்தில் இறந்தது.

பிரேத பரிசோதனையில் யானை கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் சர்வதேச அளவில் கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.  இந்நிலையில் யானையை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கேரள முதல்வர் பினராய் விஜயன் உத்தரவிட்டார். பாலக்காடு - மலப்புரம் மாவட்ட எல்லைப்பகுதியில் இச்சம்பவம் நடந்ததால் இரு மாவட்ட போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறுகையில், யானையை வெடி வைத்து கொன்றவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக வனத்துறையும் போலீசும் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 3 பேருக்கு தொடர்பு இருக்கலாம் என முக்கிய துப்பு கிடைத்துள்ளது. நேற்று சம்பவ இடத்தை மலப்புரம் மாவட்ட எஸ்.பியும் வன அதிகாரியும் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக சிலர் பொய்யான தகவல்களையும் கேரளாவை அவமானப்படுத்தும் வகையிலும் கருத்துக்களை கூறி வருகின்றனர். இது ஏற்க தக்கது அல்ல என தெரிவித்தார்.

3 வாரங்களுக்கு முன் நடந்திருக்கலாம் சம்பவம் குறித்து பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு வன அதிகாரி ஆஷிக் அலி கூறியது: இந்த யானை குறித்து எங்களுக்கு மே 25ம் தேதி தான் தெரியவந்தது. அமைதிப் பள்ளத்தாக்கில் இருந்து உணவு தேடித்தான் இந்த யானை அருகில் உள்ள கிராமத்திற்கு வந்துள்ளது.  வாய்க்குள் வைத்து வெடித்ததால் யானைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. குறைந்தது 3 வாரங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடந்திருக்கலாம். பின்னர் அந்த யானையால் சாப்பிட முடியவில்லை. காயத்தில் ஈக்கள் மொய்க்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தண்ணீருக்குள் இறங்கி நின்றிருந்தது. பட்டினியால் உடல் மெலிந்தது.  27ம் தேதி அந்த யானை தண்ணீருக்குள் இறந்து விட்டது.
கருணைக்கொலை செய்ய தீர்மானித்தோம் யானைக்கு பிரேத பரிசோதனை நடத்திய வனத்துறை மருத்துவர் டேவிட் ஆப்ரகாம் கூறுகையில், ‘‘தண்ணீரிலேயே இருந்ததால் யானையின் சுவாசக்குழாயிலும் நுரையீரலிலும் தண்ணீர் புகுந்தது. இதுவே மரணத்திற்கு காரணமானது. யானையை முதலில் பார்த்தபோதே அது பிழைக்க வாய்ப்பில்லை எனத் தெரிந்தது. அதனால் அதனை கருணைக்கொலை செய்ய முதலில் தீர்மானிக்கப்பட்டது. பின்னர் முயற்சித்து பார்க்க முடிவு செய்யப்பட்டது’’என்றார்.

மிருகங்களை கொல்வது இந்திய கலாச்சாரத்துக்கு உகந்தது அல்ல
மத்திய  சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தனது டிவிட்டர் பதிவில்,  ‘‘வெடி வைத்து மிருகங்களை கொல்வது இந்திய கலாச்சாரத்துக்கு உகந்தது அல்ல.  இதுதொடர்பாக மிகவும் தீவிரமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்வோம்’’  என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் வன அதிகாரி மோகன கிருஷ்ணன்  என்பவரி்ன் பேஸ்புக் பதிவினால் தான் வெளி உலகுக்கு தெரியவந்தது.



Tags : Pinarayi Vijayan ,Kerala , Chief Minister Pinarayi Vijayan, informed ,elephant killing , Kerala
× RELATED கேரளாவை பிரதமர் மோடி...