×

மோடி-மோரிசன் காணொலி மூலம் பேச்சுவார்த்தை இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது: ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த உறுதி

புதுடெல்லி: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி-ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் முன்னிலையில், பாதுகாப்பு உள்ளிட்ட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், சமூக இடைவெளியை பின்பற்றி, பிரதமர் மோடி பிறநாட்டு தலைவர்களுடன் கொரோனா பாதிப்பு, மருத்துவம், சுகாதாரம் குறித்தும், அனைத்து துறை அமைச்சர்கள், மாநில முதல்வர்களுடன் ஊரடங்கு நீட்டிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் பற்றியும் காணொலி மூலம் மட்டுமே கலந்துரையாடி ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று அவர் இந்தியா-ஆஸ்திரேலியா உச்சி மாநாட்டில், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த உச்சி மாநாட்டில் தீவிரவாதத்துக்கு எதிராகவும் அதற்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் மீது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்தல், இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எதிர் கொண்டுள்ள கடல்சார் பாதுகாப்பு, உலக சுகாதார அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் கலந்து ஆலோசித்தனர்.

பிரதமர் மோடி வெளிநாட்டுத் தலைவர் ஒருவருடன் இருதரப்பு காணொலி உச்சி மாநாட்டில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். அப்போது பிரதமர் மோடி பேசுகையில், ‘‘கொரோனா தொற்றினால் சமூக பாதிப்பு, பொருளாதார நலிவு சூழலில் இருந்து மீண்டு வர இரு நாடுகளும் இணைந்து ஒத்துழைக்க வேண்டும். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா நெருக்கடி காலத்தை இந்தியா ஒரு வாய்ப்பாக மாற்ற முடிவெடுத்துள்ளது. இதனை பயன்படுத்தி அனைத்து துறைகளிலும் சீர்திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது. அதன் பலன்கள் விரைவில் தெரிய வரும்’’ என்றார். கொரோனா காலத்தில் இந்திய மாணவர்களுக்கு உதவியதற்தாக, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.இதேபோல், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பேசுகையில், கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் ஒருங்கிணைந்த அணுகுமுறையை கையாள வேண்டும் என்று ஜி-20 மாநாட்டில் ஆக்கப்பூர்வமாகவும் நேர்மறையாகவும் பிரதமர் மோடி பேசியதை நினைவு கூர்ந்து அவரைப் பாராட்டினார்.

இதைத்தொடர்ந்து இரு தரப்பிலும் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் பாதுகாப்பு, சைபர் தொழில்நுட்பம், கனிம வளத்துறை, ராணுவ ஒத்துழைப்பு, கல்வி மற்றும் நீர் மேலாண்மை ஆகிய துறைகளில் இணைந்து செயல்படும் வகையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இதன் மூலம் இரு நாடுகளும் மற்ற நாடுகளின் ராணுவத் தளங்களை பழுது பார்க்கவும், ராணுவ, பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த தேவையான பரஸ்பர உதவிகளை செய்து கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இதற்கு முன்பு அமெரிக்கா, பிரான்ஸ், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இந்தியா இத்துறைகளில் ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளது.

Tags : Modi-Morrison ,Australia ,India , India-Australia ,signing 7 contracts, Modi-Morrison video
× RELATED 2005ம் ஆண்டு போடப்பட்ட போர்க்கால...