×

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு சிபிஐ தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக இருந்த போது மும்பையைச் சேர்ந்த இந்திராணி முகர்ஜி அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்றுத் தருவதாக கூறி மொரிஷியசில் இருந்து சட்டவிரோதமாக சுமார் ரூ.305 கோடி பணம் பெற்றதாகவும், இது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தின் மூலம் நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியோர் தரப்பில் அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஆஜராகி பதில் அளிக்காத காரணத்தால்  5 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் சுமார் 24 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

இந்த நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேட்டு வழக்கில் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சிபிஐ கைது செய்தது. இதைத்தொடர்ந்து அவர் இந்த வழக்கில் ஜாமீன் பெற்றார். இருப்பினும் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் உடனடியாக கைது செய்ததால் அவர் வழக்கில் இருந்து விடுதலையாக முடியாத சூழல் ஏற்பட்டு மொத்தம் 106 நாட்கள் திகார் சிறையில் இருந்தார். பின்னர் அமலாக்கத்துறை வழக்கிலும் ஜாமீன் வழங்கப்பட்டதால் ப.சிதம்பரம் தற்போது வெளியில் உள்ளார். இதற்கிடையே, ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேட்டு வழக்கில் ப.சிதம்பரத்திற்கு கொடுக்கப்பட்ட  ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிபிஐயின் கோரிக்கையை நிராகரித்ததோடு அவர்களது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்து நேற்று உத்தரவிட்டது.

Tags : Supreme Court ,CBI ,INX , Supreme Court,dismisses ,petitio,CBI,INX media case
× RELATED திருப்போரூர் அருகே துப்பாக்கிகள்...