×

இங்கிலாந்து அரசு விளக்கம் மல்லையாவை நாடு கடத்துவதில் கடைசி நேரத்தில் சட்டச்சிக்கல்

புதுடெல்லி: கடைசி நேர சட்டச்சிக்கல் காரணமாக, தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இங்கிலாந்து அரசு திடீர் விளக்கம் அளித்துள்ளது. இந்திய பொதுத்துறை வங்கிகளில் தொழிலதிபர் விஜய் மல்லையா ரூ.9000 கோடி கடன் பாக்கி வைத்துவிட்டு, இங்கிலாந்துக்கு தப்பினார். அவர் மீது சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து, மல்லையாவை இந்தியா அழைத்து வர தீவிர முயற்சி மேற்கொண்டன. இதுதொடர்பாக இங்கிலாந்து அரசிடமும் அணுகின. நாடு கடத்தப்படுவதை எதிர்த்து மல்லையா இங்கிலாந்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில், மல்லையாவை நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. கடைசியாக இங்கிலாந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் வாய்ப்பிலும் மல்லையா தோல்வி அடைந்தார். இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி அவரை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளில் சிபிஐ, அமலாக்கத்துறை தீவிரமாக ஈடுபட்டது. இந்தியா அழைத்து வரப்படும் மல்லையா மும்பை ஆர்தர் சிறையில் அடைப்பதற்கான முழு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில், மல்லையா நேற்று முன்தினம் இரவு நாடு கடத்தப்பட்டதாக சிபிஐ வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியது. ஆனால் கடைசி நேர சட்டச் விவகாரங்களால் மல்லையா அழைத்து வரப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது.

இது தொடர்பாக டெல்லியில் உள்ள இங்கிலாந்து தூதரக அதிகாரி நேற்று விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ‘‘விஜய் மல்லையா கடந்த மாதம் தனக்கிருந்த சட்ட வாய்ப்புகள் அனைத்தையும் இழந்து விட்டார். இருப்பினும், அவரை நாடு கடத்துவதில் சில சட்ட சிக்கல்கள் இருக்கின்றன. அவை என்னவென்று விளக்கமாக கூற முடியாது. சட்டச் சிக்கல்கள் முழுமையாக தீர்க்கப்பட்ட பின்னரே மல்லையா இந்தியா அனுப்பப்படுவார். அதற்கான பணிகளில் இங்கிலாந்து அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அப்பணிகள் முடிந்ததும் விரைவில் மல்லையா இந்தியா அனுப்பப்படுவார்’’ என்றார். மல்லையா இந்தியாவில் 2 முறை மாநிலங்களவை எம்பியாக இருந்துள்ளார். அரசியல் பின்புலம் கொண்டவர் என்பதால், அனைத்து சட்ட வாய்ப்புகளையும் இழந்த நிலையில் அவர் இங்கிலாந்து அரசிடம் அரசியல் அடைக்கலம் கோர முயற்சிக்கிறாரா என்ற சந்தேகமும் தற்போது எழுந்துள்ளது.

Tags : Government ,UK ,Exile UK Government Explains Last Time Legal In Mallya , UK Government, Explains ,Last Time Legal ,Mallya's Exile
× RELATED இங்கிலாந்து, சிங்கப்பூரில் சிக்கி தவித்த 327 பேர் சென்னை திரும்பினர்