×

ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்காத நிறுவனங்கள் மீது ஜூன் 12 வரை நடவடிக்கை எடுக்கக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி:  கொரோனா பரவலை தடுக்க, கடந்த மார்ச் 25ம் தேதி முதன் முதலாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு, கடந்த மார்ச் 29ம் தேதி மத்திய அரசு ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தாலும், ஊழியர்களுக்கு முழு சம்பளமும் வழங்க வேண்டும். இவ்வாறு வழங்காத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியிருந்தது. ஊரடங்கால் நிறுவனங்களின் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, அரசின் இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே.கவுல் மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால்ஆஜரானார். நிறுவனம் ஒன்றில் சார்பில் ஆஜரான வக்கீல் ஒருவர், ‘‘மத்திய அரசு இஎஸ்ஐ நிதியில் இருந்து அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்த பட்ச ஊதியம் வழங்கலாம்’’ என்றார். அதற்கு வேணுகோபால் அளித்த பதிலில், ‘‘இஎஸ்ஐ நிதியில் இருந்து இந்த பணத்தை வாங்கலாம். ஆனால், அதை ஊழியர்களுக்கு வழங்க இயலாது’’ என்றார்.

 இந்த வழக்கில் அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், ‘ஊரடங்கை காரணம் காட்டி நிறுவனங்கள் ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தற்காலிக உத்தரவுதான். ஆனால், இது கடந்த மார்ச் 25 முதல் மே 17 வரை, அதாவது 54 நாட்களுக்குதான் அமலில் இருந்தது. பின்னர் இது திரும்பப்பெறப்பட்டு விட்டது. அதன்பிறகு பணிக்கு திரும்பாத ஊழியர்களுக்கு நிறுவனங்கள் சம்பளம் வழங்க அவசியமில்லை’ என கூறியிருந்தது.  இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘‘ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும் என்ற உத்தரவை மீறியதற்காக, நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, வரும் 12ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.

Tags : Companies ,Supreme Court , Companies ,salary,employees,June 12,Supreme Court order
× RELATED பூந்தமல்லி நகராட்சி ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா