புதுக்கோட்டை சிறுமி பலி : மகளை நரபலி தந்தால் புதையல் கிடைக்கும், ஆண் குழந்தை பிறக்கும் என தந்தைக்கு ஆசை வார்த்தை கூறிய பெண் மந்திரவாதி கைது

புதுக்கோட்டை : மகளை நரபலி தந்தால் புதையல் கிடைக்கும், ஆண் குழந்தை பிறக்கும் என்று 53 வயது பன்னீருக்கு ஆசை வார்த்தை கூறிய மந்திரவாதி வசந்தியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாகி இருந்த அவருடன் சேர்த்து பெண் உதவியாளர் உட்பட மேலும் சிலரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே நொடியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(50). இவரது முதல் மனைவி இந்திரா, அவருக்கு வித்யா (14) உள்பட 4 பிள்ளைகளும், 2வது மனைவி மூக்காயி (45)க்கு 2 குழந்தைகளும் உண்டு. இவர்களில் வித்யா 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மே 18ம் தேதி மதியம் வீட்டின் அருகே 1.5 கி.மீ. தொலைவில் உள்ள ஏரிக்கு வித்யா தண்ணீர் பிடிக்க சென்றார். அதன்பிறகு, பெற்றோர் அவரை தேடி சென்றபோது உடலில் காயங்களுடன் கிடந்துள்ளார்.

அவரை தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வித்யா மறுநாள் இறந்தார். இதுதொடர்பாக கந்தர்வகோட்டை மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில், தந்தையும் 2வது மனைவியும் சேர்ந்து சொத்தும், பணமும் பெருக வேண்டும் என்பதற்காக பெண் மந்திரவாதி ஒருவரின் ஆலோசனைப்படி நரபலி கொடுத்தனர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதையடுத்து, நரபலி கொடுத்ததாக பன்னீர்செல்வம், உறவினர் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மந்திரவாதியான வசந்தி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த முருகாயி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். இதற்கிடையில் கடந்த 10 தினங்களுக்கு முன்பாக பன்னீர்செல்வத்தின் 2வது மனைவி மூக்காயியும் இறந்துவிட்டார். அவரின் இறப்பு குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பெண் மந்திரவாதி கைது

இந்நிலையில், பன்னீர் உட்பட 5 பேரை ஏற்கனவே கைது செய்த போலீஸ் தற்போது, பெண் மந்திரவாதியான வசந்தியையும் கைது செய்துள்ளனர். மருத்துவமனையில் சிறுமி இறந்தபோதே வசந்தி தலைமறைவாகி விட்டார். உடனே தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிரமான தேடுதல் வேட்டைக்கு பிறகே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு முருகாயி என்ற பெண் அசிஸ்டெண்ட் இருந்திருக்கிறார். அவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் இதற்கு முன்பு இப்படி எத்தனை பேரை நரபலி கொடுத்துள்ளனர்.. எத்தனை பேருக்கு இப்படிப்பட்ட ஐடியாக்களை தந்து ஏமாற்றி பணம் பறித்துள்ளனர் என்பன போன்ற விசாரணைகளில் போலீசார் இறங்கி உள்ளனர். தொடர் விசாரணை வசந்தியிடம் நடந்து வருகிறது.

Related Stories: