×

உலகளவில் 5 நாட்களில் 5 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று: உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

ஜெனிவா: உலகளவில் கடந்த சனிக்கிழமை முதல் புதன்கிழமை வரை ஒவ்வொரு நாளும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை கொரோனா வைரஸ் தாக்கியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில் செய்தியாளர்களை சந்தித்த உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் இந்த தகவலை கூறியுள்ளார். அமெரிக்காவின் நிலவரம் குறித்து கவலை தெரிவித்துள்ள அவர், அமெரிக்காவில் பரவும் தொற்றின் எண்ணிக்கை ஒட்டுமொத்த நாடுகளில் பதிவான எண்ணிக்கையை விட கூடுதலாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் நிறவெறி போராட்டங்கள் தொடர்வதால் கொரானா வைரஸ் பரவல் மேலும் அபரிமிதமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே ஐரோப்பிய நாடுகளில் தொற்றின் வேகம் இறங்குமுகமாக மாறியுள்ளது. மார்ச் 22ம் தேதிக்கு பிறகு தற்போது மிகவும் குறைவான தொற்று பதிவாகியுள்ளது. தற்போது வரை 65 லட்சத்து 73 ஆயிரத்து 540 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 31 லட்சத்து 70 ஆயிரத்து 505 பேர் குணமடைந்துவிட்டனர். 3 லட்சத்து 88 ஆயிரத்து 41 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10 ஆயிரத்து 845 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 1,253 பேர் உயிரிழந்துள்ளனர்.

மலேரியா மாத்திரை மீண்டும் பரிசோதனை

இதற்கிடையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்தலாமா என்பது குறித்த மருத்துவ பரிசோதனைகளை மீண்டும் தொடங்க உலக சுகாதார அமைப்பு தீர்மானித்துள்ளது. கிடைத்த தரவுகளின் அடிப்படையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைக்கான சோதனை நெறிமுறையை மாற்ற வேண்டிய தேவை இல்லை என்று உலக சுகாதார தொற்று பாதுகாப்பு கண்காணிப்பு குழு பரிந்துரைத்துள்ளது. இதைத்தொடர்ந்து ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் குறித்த சோதனைகள் அனைத்தையும் தொடர உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக சிகிச்சை, நோய் தடுப்பு மற்றும் நோய் கண்டறியும் செயல்பாடுகளில் அறிவியல் கண்ணோட்டத்துடன் தொடர்ந்து செயல்பட உலக சுகாதார அமைப்பு உறுதியளித்துள்ளது. இதையடுத்து 35 நாடுகளில் தேர்வு செய்யப்பட்ட 3,500க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து மீண்டும் பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் கிடைக்கும் முடிவின் அடிப்படையில் கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்தலாமா வேண்டாமா என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : World Health Organization , World Health Organization, Corona, Hydroxychloroquine
× RELATED தடுப்பூசிகளை செலுத்தாமல் தளர்வுகளை...