முள்ளோடை எல்லையில் எஸ்பி திடீர் ஆய்வு இ-பாஸ் இல்லாத தமிழக மக்களை திருப்பி அனுப்பியதால் வாக்குவாதம்

* கடலூர் ஆல்பேட்டை வரை வாகனங்கள் அணிவகுப்பு: போக்குவரத்து பாதிப்பு

பாகூர்:  கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழக பகுதியான விழுப்புரம், கடலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்குள் வந்தால், இங்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் தமிழகப் பகுதியில் இருந்து புதுச்சேரிக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டது. இ-பாஸ் வைத்துள்ளவர்கள் மட்டுமே, புதுச்சேரிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. புதுச்சேரி எல்லையான முள்ளோடையில் நேற்று எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற வாகனங்களை நிறுத்தி விசாரணை நடத்தினர். இ-பாஸ் வைத்திருந்தவர்கள் மட்டுமே புதுச்சேரிக்குள் நுழைய அனுமதி அளித்தனர். மற்றவர்களை திருப்பி அனுப்பினர். இதனால் பொதுமக்கள், போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் கெடுபிடி காரணமாக, வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்றன. இது, நேரம் ஆக ஆக, கடலூர் ஆல்பேட்டை வரை சென்றதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு மேல் தான் நிலைமை சீரானது. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அரசின் உத்தரவின்படி தான் நாங்கள் எங்கள் பணியை செய்கிறோம். இ-பாஸ் உடன் வருபவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது. பொதுமக்கள் அது தெரியாமல், எங்களிடம் வாக்குவாதம் செய்து வருகின்றனர். அவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு தான் நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றார். இதற்கிடையே, கடலூர் எல்லை பகுதியான கங்கனாங்குப்பம் சோதனை சாவடியில், புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற வாகனங்களை, தமிழக போலீசார் தடுத்தி நிறுத்தினர். இது புதுச்சேரி போலீசாரின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கவே செய்ததாக கூறப்படுகிறது.

Related Stories: