சதியா வேலையா? போலீஸ் விசாரணை காந்தி மார்க்கெட்டில் மீண்டும் ‘தீ’ விபத்து

திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட்டில் மீண்டும் நேற்று தீவிபத்து ஏற்பட்டது மட்டுமின்றி, சில கடைகளில் பூட்டு உடைக்கப்பட்டு திருட்டு சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக திருச்சி காந்தி மார்க்கெட் கடந்த 70 நாட்களுக்கும் மேலாக பூட்டியே கிடக்கிறது. காந்தி மார்க்கெட்டை திறந்து விட வேண்டும் என வியாபாரிகள் ஒருபுறம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் காந்தி மார்க்கெட்டிலிருந்து பரும்புகை வெளியேறியது. இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் சென்று பார்த்தபோது 6ம் நம்பர் கேட் அருகே கடைகளுக்கு முன் போடப்பட்டிருந்த நிழல் கீற்றுப்பந்தல் தீப்பற்றி எரிந்தது.இதுகுறித்து திருச்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் மெல்க்யூ ராஜா தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

இதேபோல் கடந்த 20 நாட்களுக்கு முன் தீப்பற்றி எரிந்தது குறிப்பிடத்தக்கது. தீவிபத்து காரணம் குறித்து காந்திமார்க்கெட் போலீசார் விசாரிக்கின்றனர். காந்திமார்க்கெட் ஏற்கனவே காலி செய்யப்பட்டிருந்ததால் பெரிய அளவிலான பொருட்சேதம் இல்லை. இதற்கிடையே தீவிபத்து குறித்து தகவலறிந்த சில வியாபாரிகள் தங்களது கடைகளை சென்று பார்த்தனர். அப்போது, 20க்கும் மேற்பட்ட கடைகள் பூட்டு உடைக்கப்பட்டு எலக்ட்ரானிக் தராசு, புதிய ரூபாய் நோட்டுகள், எடைகற்கள் உள்ளிட்ட பல பொருட்கள் திருடப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கடை உரிமையாளர்கள் போலீசாரிடம் புகார் அளிக்க தயாராகி உள்ளனர்.

வியாபாரிகள் குற்றச்சாட்டு

கொரோனா ஊரடங்கால் பூட்டிய கடைகளை திறக்க வைப்பதற்காக யாரேனும் திட்டமிட்டு இதை செய்தார்களா? அல்லது எதிர்பாராமல் இந்த தீவிபத்து நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இதற்கிடையே காந்திமார்க்கெட் பூட்டியே இருப்பதால் உரிய பாதுகாப்பு இல்லை. மாநகராட்சியும் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என வியாபாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

Related Stories: