மூன்றாவது மாற்றுப்பாதை திட்டத்தின் மூலம் மஞ்சூர்கோவை சாலையில் கூடுதல் பாலங்கள் அமைக்கும் பணி தீவிரம்

மஞ்சூர்: மூன்றாவது மாற்றுப் பாதை திட்டத்தின் கீழ் மஞ்சூர்கோவை சாலையில் கூடுதல் பாலங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் இருந்து கெத்தை, முள்ளி, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு சாலை வசதி உள்ளது. நீண்ட காலமாக போக்குவரத்து பயன்பாட்டில் இருந்து வரும் இந்த சாலையை சீரமைத்து ஊட்டி கோவை இடையே மூன்றாவது பாதையாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்தது.  இதைத்தொடர்ந்து ரூ.47 கோடி மதிப்பீட்டில் சாலை சீரமைக்கும் பணிகள் கடந்தாண்டு துவங்கியது. மஞ்சூர் மின்வாரிய மேல்முகாம் முதல் பெரும்பள்ளம் வரை மற்றும் வெள்ளியங்காடு பகுதியில் இருந்து பெரும்பள்ளம் பகுதி வரை என 2 பிரிவுகளாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா நோய் தொற்று பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் சுமார் 2 மாதங்களாக சாலை சீரமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

Advertising
Advertising

இதைத்தொடர்ந்து சமீபத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் சீரமைப்பு பணிகள் துவங்கியது. ஏற்கனவே சாலையில் பெரும்பாலான பகுதிகளில்  உள்ள கொண்டை ஊசி வளைவுகளை அகலப்படுத்துதல் மற்றும் பல இடங்களில் சாலைகளுக்கு அடியில் கழிவுநீர் கால்வாய் தரைப்பாலம் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.  இந்த நிலையில் தற்போது ஓணிகண்டி கெத்தை இடையே மூன்று இடங்களில் கூடுதல் பாலங்கள் அமைக்கும் பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே உள்ள பாலங்களை ஒட்டி கூடுதல் பாலங்கள் அமைக்கப்படுகிறது. மஞ்சூர் வழியாக ஊட்டிகோவை இடையே மூன்றாவது மாற்று பாதைக்கான சீரமைப்பு பணிகள் விரைவாக முடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: