முதல்வர் அறிவித்து இரண்டு ஆண்டாச்சு காளையார்கோவில் தெப்பக்குள் சுவர் எப்போது உயர்த்தப்படும்?: பொதுமக்கள் கேள்வி

காளையார்கோவில்: முதல்வர் அறிவித்து 2 ஆண்டுகளாகியும் காளையார்கோவில் தெப்பக்குளம் கைப்பிடி சுவர் உயர்த்தும் பணிகள் ஏன் துவங்கவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். காளையார்கோவிலில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ சொர்ண காளீஸ்வரர் கோயிலின் தெப்பக்குளம் சுமார் 11 ஏக்கர் பரப்பளவு கொண்டது. குளத்தின் நடுவே 1 ஏக்கர் பரப்பளவில் மைய மண்டபம் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் தெப்பத்தேர் இழுக்கப்படும். இவ்விழாவை காண 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவர். கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக போதிய மழையின்மை, நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் தெப்பம் வற்றிய நிலையில் இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தெப்பத்தில் சிறிதளவு தண்ணீர் நிரம்பியுள்ளது. மேலும் தெப்பக்குளத்தை சுற்றி ரோடுகள் உயர்த்தப்பட்டுள்ளதால், குளத்தின் கைப்பிடி சுவரின் உயரம் குறைந்து விட்டது. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் யாரேனும் நிலைதடுமாறி குளத்தில் விழும் அபாய நிலை உள்ளது. தவிர மிக, மிக தாழ்வாக கைப்பிடி சுவர் இருப்பதால் வாகனங்கள் குளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது.

மேலும் கனரக வாகனங்கள் அதிகளவு செல்வதால், கைப்பிடி சுவர் அதிர்வு தாங்காமல் இடிந்து குளத்திற்குள் விழுகின்றன. இதனால் வரலாற்று சிறப்புமிக்க தெப்பக்குளத்தை பாதுகாக்கும் வகையில் கைப்பிடி சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும், கனரக வாகனங்கள் செல்வதை தடுக்க வேண்டும், காலை, மாலை வேளைகளில் பொதுமக்கள் நடைபயிற்சி செல்லும் வகையில் குளத்தை சுற்றி நடைமேடையுடன், பூங்கா அமைத்து தர வேண்டும், மழைநீர் குளத்திற்கு வரும் வகையில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று கடந்த 2018ம் ஆண்டு சிவகங்கையில் நடந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் காளையார்கோவில் தெப்பக்குளத்தை சுற்றி கைப்பிடி சுவர் உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்தார். ஆனால் இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் முதல்வர் வாக்குறுதி என்னாச்சு என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘காளையார்கோவில் சொர்ண காளீஸ்வரர் கோயில் தெப்பக்குளம் கைப்பிடி சுவர் உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் அதற்கான அடிப்படை பணிகள் கூட இதுவரை நடக்கவில்லை. எனவே முதல்வர் அறிவித்தபடி குளத்தின் கைப்பிடி சுவரை உயர்த்தும் பணிகளை விரைந்து துவக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: