கொடைக்கானலில் மிரட்டும் காட்டு மாடுகள் மிரளும் பொதுமக்கள்: வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை தேவை

கொடைக்கானல்: கொடைக்கானலில் காட்டு மாடுகள் மிரண்டு ஓட்டம் பிடித்தன. இதை கண்டு பொதுமக்கள் அலறியடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொடைக்கானல் நகரில் காட்டுமாடுகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காட்டுமாடுகள் கூட்டம், கூட்டமாக திரிவதால் தேவையில்லாத இடையூறும், அச்சமும் ஏற்பட்டு வருகிறது. காட்டு மாடுகள் முட்டி சிலர் பலியாகியும், பலர் காயமும் அடைந்துள்ளனர். எனினும் வனத்துறை காட்டுமாடுகளை வனத்திற்குள் நிரந்தரமாக விரட்ட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அண்ணா சாலை பகுதியில் 9 காட்டு மாடுகள் புகுந்தன. இவற்றை பார்த்ததும் சாலையில் நடமாடிய பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினர். பொதுமக்களை பார்த்து காட்டு மாடுகளும் மிரண்டு மூஞ்சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி சாலை பகுதியில் ஓடின.

இதை கண்டு அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். பின்னர் காட்டு மாடுகள் வனத்திற்குள் சென்ற பிறகுதான் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘காட்டு மாடுகள் மிரண்டு ஓடியதால், நாங்களும் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடினோம். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால் இந்நிலை எப்பவும் இருக்காது. வனத்துறையினர் காட்டு மாடுகளை வனத்திற்குள் நிரந்தரமாக விரட்ட நடவடிக்கை எடுப்பதுடன், அவை வெளியேறாமல் இருக்க வனத்திற்குள்ளேயே உணவு, தண்ணீருக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு இருக்கும்’ என்றார்.

Related Stories: